எந்த சக்தியாலும் தடுக்க முடியாது; இந்தியாவின் குரலை ஒலிக்கும் ஒற்றுமை பாதயாத்திரை - கர்நாடகத்தில் ராகுல் காந்தி பேச்சு


எந்த சக்தியாலும் தடுக்க முடியாது; இந்தியாவின் குரலை ஒலிக்கும் ஒற்றுமை பாதயாத்திரை - கர்நாடகத்தில் ராகுல் காந்தி பேச்சு
x
தினத்தந்தி 1 Oct 2022 12:15 AM IST (Updated: 1 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் குரலை ஒலிக்கும் ஒற்றுமை பாதயாத்திரை என்று ராகுல் காந்தி கூறினார்.

பெங்களூரு:

அரசியல் சாசனம்

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுப்பேட்டையில் ராகுல் காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரை நேற்று தொடங்கியது. இந்த பாதயாத்திரை தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-

நான் பாரத் ஜோடோ பாதயாத்திரையை தொடங்கி நடத்தி வருகிறேன். பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைகளால் நாட்டில் வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எதிராக போராட்டம் நடத்துவது தான் இந்த பாதயாத்திரையின் நோக்கம். அரசியல் சாசனத்தை காக்கும் யாத்திரை. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறோம்.

தடுக்க முடியாது

சில நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. சில நேரங்களில் மழை பெய்கிறது. ஆனாலும் நாங்கள் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடைபயணம் மேற்கொண்டு வருகிறோம். நான் ஒருவன் மட்டும் நடப்பது இல்லை. என்னுடன் லட்சக்கணக்கானோர் நடக்கிறார்கள். இந்த யாத்திரையில் விரோதம், வன்முறையை பார்க்க முடியாது. அனைத்து தரப்பு மக்களும் இதில் கலந்து கொண்டு என்னுடன் நடக்கிறார்கள்.

இந்த பாதயாத்திரையின்போது யாராவது கீழே விழுந்தால் அனைவரும் சேர்ந்து அவரை தூக்கி விடுகிறோம். அப்போது யாரும் மொழி, சாதி, மதம் குறித்து கேட்பது இல்லை. இது தன் நமது அன்பு, அமைதி, ஒருங்கிணைந்த இந்தியா. இந்த ஒற்றுமை பாதயாத்திரை கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை செல்கிறது. எந்த சக்தியால் இதை தடுக்க முடியாது. காரணம் இது இந்திய நாட்டின் குரலை ஒலிக்கும் பாதயாத்திரை.

மக்களின் பிரச்சினைகள்

நான் தினமும் 8 மணி நேரம் நடக்கிறேன். வழியில் பல்வேறு தரப்பு மக்கள் தங்களின் பிரச்சினைகளை என்னிடம் கூறுகிறார்கள். விலைவாசி உயர்வு, வேலையின்மை, விவசாயிகள் மீதான தாக்குதல், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம் குறித்து மக்கள் தங்களின் வேதனையை என்னிடம் தெரிவிக்கிறார்கள். எங்கும் பெரிய அளவில் நாங்கள் உரையாற்றுவது இல்லை. 8 மணி நேரம் நடந்துவிட்டு மக்கள் மத்தியில் 15 நிமிடங்கள் பேசுகிறேன்.

மக்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்வதற்காக இந்த பாதயாத்திரை பயனுள்ளதாக உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடப்பது ஏன் என்று மக்கள் கேள்வி கேட்கலாம். ஜனநாயகத்தில் சில பிரச்சினைகள் உள்ளன. ஊடகங்கள், நாடாளுமன்றம் போன்ற அனைத்திலும் எதிர்க்கட்சிகளின் குரலை ஒலிப்பது தடுக்கப்பட்டுள்ளது. ஊடகங்களில் நமது விஷயங்கள் வருவது இல்லை.

அனுமதிப்பது இல்லை

ஊடகங்களை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது. நாடாளுமன்றத்தில் நாங்கள் பேச முயற்சி செய்தால் அதை அனுமதிப்பது இல்லை. எதிா்க்கட்சி தலைவர்களை கைது செய்கிறார்கள். அதனால் பிரச்சினைகளை பேச வேறு வழி இல்லாத நிலையில் நாங்கள் இந்த பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளோம். மக்களுடன் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் நடப்பது மட்டுமே எதிர்க்கட்சிகளுக்கு இருக்கும் ஒரே வழி.

இந்த யாத்திரையில் நாட்டு மக்களின் குரலை காது கொடுத்து கேட்கிறோம். இந்தியர்களின் குரலை அடக்க தைரியம் யாருக்கும் இல்லை. இன்னும் 21 நாட்கள் கர்நாடகத்தில் நான் நடக்க உள்ளேன். உங்களின் பிரச்சினைகளை கேட்க இருக்கிறேன். கர்நாடகத்தில் ஊழல், வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகளை மக்களிடம் கேட்பேன்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.


Next Story