உ.பி.யில் வீடுகள் இடிப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மாநில அரசு தரப்பு விளக்கம்!


உ.பி.யில் வீடுகள் இடிப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மாநில அரசு தரப்பு விளக்கம்!
x

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சொத்துகள் இடிப்புகள் உரிய நடைமுறைகளுக்குப் பின் நடந்தது என்று அரசு தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி,

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த நுபுர்சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி டெல்லி, உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்குவங்க மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது. உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பிரக்யராஜில் வன்முறைக்கு காரணமானவராகக் கூறப்படும் ஜாவேத் அகமது என்பவரின் வீடு புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது. முறையான அனுமதி பெறாமல் வீடு கட்டப்பட்டதால் இடிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார். காவல் துறையினர் மீது கல் வீசி தாக்கிய புகாருக்கு ஆளான மேலும் இருவரின் வீடும் கான்பூரில் இடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, வீடுகள் இடிப்பதை தடுக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் ஜமியத் உலாமா ஐ ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு வழக்குத் தொடர்ந்தது. நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, விக்ரம்நாத் ஆகியோர் அமரவின் முன்பு இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது.

இவ்வழக்கு விசாரணையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உத்திரப்பிரதேசத்தில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை உரிய விதிகளைப் பின்பற்றி இடிக்க வேண்டும். விதிகளைப் பின்பற்றாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை அனுமதிக்க முடியாது. வீடுகள் இடிக்கப்பட்டது தொடர்பாக மாநில அரசு 3 நாள்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வீடுகளை இடிக்க இடைக்காலத் தடை விதிக்க முடியாது , பழிவாங்கும் நடவடிக்கையாக வீடுகளை அகற்றக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், உ.பி.யில் வீடுகள் இடிப்பு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் அம்மாநில அரசு தரப்பு விளக்கம் அளித்துள்ளது. உ.பி. அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

உ.பி., மாநிலத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சொத்துகள் இடிப்புகள் உரிய நடைமுறைகளுக்குப் பின் நடந்தது. வெவ்வேறு சட்டங்களின்படி கலவரக்காரர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆகவே, கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த இடிப்பு சம்பவத்திற்கும் எந்த வகையிலும் தொடர்பு இல்லை.

மனுதாரர் ஜமியத் உலமா-ஐ-ஹிந்த், சில ஊடக அறிக்கைகளைத் தேர்ந்தெடுத்து அவர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை. ஆகவே இந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story