மங்களூரு விமான நிலையத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய ஓடுபாதையில் இன்று முதல் விமான சேவை தொடங்கும் அதிகாரிகள் தகவல்


மங்களூரு விமான நிலையத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய ஓடுபாதையில் இன்று முதல் விமான சேவை தொடங்கும் அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 1 Jun 2023 12:15 AM IST (Updated: 1 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மங்களூரு விமான நிலையத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய ஓடுபாதையில் இன்று (வியாழக் கிழமை) முதல் விமான சேவை தொடங்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மங்களூரு-

மங்களூரு விமான நிலையத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய ஓடுபாதையில் இன்று (வியாழக் கிழமை) முதல் விமான சேவை தொடங்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மங்களூரு விமான நிலையம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேவில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் 2.45 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஓடுபாதையை புனரமைக்கும் பணி நடந்தது. இந்த பணி கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி தொடங்கப்பட்டது. இடைவிடாது நடந்த இந்த பணி 75 நாட்களில் கடந்த மாதம்(மே) 28-ந் தேதி முடிக்கப்பட்டது. இந்த புனரமைப்பு பணியில் ஓடுபாதையில் நெகிழ்வான மேலடுக்கு அமைக்கப்பட்டு இருக்கிறது. இது விமானங்கள் வந்து செல்ல ஏதுவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவிலேயே நெகிழ்வான மேலடுக்குடன் அமைக்கப்பட்ட முதல் ஓடுபாதை மங்களூரு விமான நிலைய ஓடுபாதைதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி விமான நிலைய அதிகாரிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-

தகவல் அனுப்பும் பணி

மங்களூரு விமான நிலைய ஓடுபாதையை மேம்படுத்த கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி ஆய்வு நடத்தப்பட்டது. கர்நாடகத்தில் பெங்களூருவுக்கு அடுத்து மங்களூரு விமான நிலையம் தான் அதிக விமானங்களை கையாள்கிறது. நாள் ஒன்றுக்கு 36 விமானங்கள் மங்களூரு விமான நிலையத்தில் கையாளப்படுகிறது. தினமும் 8 மணி நேரம் 52 நிமிடங்களில் விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானிகளுக்கு தகவல்கள் வழங்கும் பணி நடந்து வருகிறது. அதாவது தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை விமானங்களை கையாளாமல், மங்களூரு வான் வழியாக செல்லும் விமானங்களுக்கும் தகவல் அனுப்பும் பணி நடந்து வருகிறது.

3 அடுக்குகளை கொண்டது

75 நாள் அதாவது 529 மணி நேரத்தில் மங்களூரு விமான நிலைய ஓடுபாதை மேம்படுத்தப்பட்டு உள்ளது. தினமும் இந்த ஓடுபாதையில் 18 உள்நாட்டு விமானங்களும், மற்ற நேரத்தில் வெளிநாட்டு விமானங்களும் கையாளப்பட உள்ளன. இந்த ஓடுபாதை 'ஆஸ்பால்ட்' என்ற பெட்ரோலியத்தில் இருந்து பிரித்து எடுக்கக்கூடிய பசை போன்ற பொருள் மூலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே இவ்வாறு அமைக்கப்பட்ட முதல் ஓடுபாதை இதுதான்.

இந்த ஓடுபாதை 3 அடுக்குகளை கொண்டது. மேலடுக்கு நெகிழ்வான தன்மை கொண்டது. இதன்மூலம் விமானங்கள் தரையிறங்கவும், புறப்படவும் ஓடுபாதை ஏதுவாக இருக்கும். 2.45 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஓடுபாதையை அமைக்க 81 ஆயிரத்து 696 டன் 'ஆஸ்பால்ட்' பயன்படுத்தப்பட்டுள்ளது. சாதாரணமாக இந்த அளவு ஆஸ்பால்ட்டைக் கொண்டு 82 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைத்து விடலாம். மேலும் 80 அதிநவீன கட்டுமான பொருட்களும் ஓடுபாதையை அமைக்க பயன்படுத்தப்பட்டு உள்ளன.

இன்று முதல்...

எதிர்காலத்தில் மங்களூரு விமான நிலையம் மேலும் வளர்ச்சி அடையலாம். அதனை கருத்தில் கொண்டு இவ்வாறு ஓடுபாதை மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. திட்டமிட்ட காலத்திற்கு முன்பே ஓடுபாதை பணிகளை வெற்றிகரமாக முடித்த அனைவருக்கும் பாராட்டுகள் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓடுபாதையில் இன்று(வியாழக்கிழமை) முதல் விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story