உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வி
உப்பள்ளி -தார்வார் மத்திய தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வி அடைந்தார்.
உப்பள்ளி-
உப்பள்ளி -தார்வார் மத்திய தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வி அடைந்தார். தொகுதிக்கு வராமலேயே வினய் குல்கர்னி வெற்றி பெற்றார்
வாக்கு எண்ணிக்கை
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த 10-ந் தேதி நடந்தது. நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதில் தார்வார் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் 4 இடங்களில் காங்கிரசும், 3 இடங்களில் பா.ஜனதா கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. இதில் உப்பள்ளி- தார்வார் மத்திய தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் 16 ஆயிரத்து 804 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் மகேஷ் தெங்கினகாய் 27 ஆயிரத்து 459 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
ஜெகதீஷ் ஷெட்டர் 10 ஆயிரத்து 655 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி உள்ளார். இவர் பா.ஜனதா கட்சியில் டிக்கெட் கிடைக்காத அதிருப்தியால் காங்கிரசில் சமீபத்தில் இணைந்தார். அவரை தோற்கடிக்க பா.ஜனதா மூத்த தலைவர் எடியூரப்பா, ஈஸ்வரப்பா ஆகியோர் தீவிரமாக அந்த தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
வினய் குல்கர்னி வெற்றி
தார்வார் புறநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வினய் குல்கர்னி போட்டியிட்டார். அவரை கொலை வழக்கு சம்பந்தமாக சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் தார்வார் மாவட்டத்திற்குள் செல்ல அவருக்கு கோர்ட்டு தடை விதித்து இருந்தது. இந்தநிலையில் வினய் குல்கர்னியின் மனைவி சிவலீலா குல்கர்னி மற்றும் அவரது மகள் ஆகியோர் தார்வார் புறநகர் தொகுதி முழுவதும் பிரசாரம் செய்தனர்.
வினய் குல்கர்னி சமூகவலைத்தளங்கள், செல்போன் செயலிகள் மற்றும் புதிய தொழில்நுட்ப உதவியுடன் தொகுதிக்குள் வராமலேயே பிரசாரம் செய்தார். இதன் மூலம் வினய் குல்கர்னி 38 ஆயிரத்து 458 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று உள்ளார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் அப்ரூத் தேசாயியை 8 ஆயிரத்து 381 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைய செய்துள்ளார்.
உப்பள்ளி- தார்வார் கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரசாத் அப்பய்யாயும், கல்கட்டகியில் காங்கிரஸ் வேட்பாளர் சந்தோஷ் லாட் மற்றும் நவலகுந்து காங்கிரஸ் வேட்பாளர் ஒனரெட்டியும் வெற்றி வாகை சூடியுள்ளனர்.