நகர்ப்புற வாக்காளர்களிடம் ஓட்டு போட அக்கறை இல்லை; தேர்தல் கமிஷன் ஆதங்கம்
குஜராத்தில் முதல் கட்ட தேர்தலில் நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் ஓட்டு போட அக்கறையற்ற நிலை நீடிப்பதாக தேர்தல் கமிஷன் ஆதங்கம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
குஜராத்தில் முதல் கட்ட தேர்தலில் நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் ஓட்டு போட அக்கறையற்ற நிலை நீடிப்பதாக தேர்தல் கமிஷன் ஆதங்கம் தெரிவித்துள்ளது.
இமாசலபிரதேசம், குஜராத்
இமாசலபிரதேச மாநிலத்தில் 68 இடங்களைக் கொண்டுள்ள சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந் தேதி தேர்தல் நடந்தது. 182 இடங்களைக் கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. முதல் கட்ட தேர்தல், 1-ந் தேதி நடந்து முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட தேர்தல் நாளை (5-ந் தேதி) நடக்க உள்ளது.
தேர்தல் கமிஷன் ஆதங்கம்
இதையொட்டி தேர்தல் கமிஷன் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறியுள்ள முக்கிய விஷயங்கள்:-
* இமாசலபிரதேசத்தில் நகர்ப்புற தொகுதிகளில் உள்ள வாக்காளர்களில் பலரும் ஓட்டு போட வில்லை. சிம்லாவில் 62.53 சதவீத வாக்குகளே பதிவாகின. கடந்த தேர்தலைக் காட்டிலும் இது 13 சதவீதம் குறைவு.
* குஜராத்தில் முதல் கட்ட தேர்தலில் நகரங்களில் நடந்த வாக்குப்பதிவு, அங்குள்ள வாக்காளர்கள் ஓட்டு போடுவதில் அக்கறையின்றி இருப்பது தொடர்கிறது என்பதையே காட்டுகிறது. இதனால் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது.
ஒட்டுமொத்த அளவைவிட குறைவு
* சூரத், ராஜ்கோட், ஜாம்நகர் தொகுதிகளில் ஒட்டு மொத்த அளவான 63.3 சதவீதத்தையும் விட குறைவு.
*காந்திதாம் தொகுதியில் தொழில் நிறுவனங்கள் நிறைய உள்ளன. அங்கு மிகக்குறைந்த அளவாக 47.8 சதவீத வாக்குகளே பதிவாகி இருக்கிறது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 6.34 சதவீதம் குறைவு.
* அடுத்தபடியாக சூரத்தில் உள்ள கரஞ்ச் தொகுதியில் கடந்த தேர்தலில் 55.91 சதவீத வாக்குகள் பதிவாகின. இப்போது அதைவிட 5.37 சதவீதம் குறைவு.
* குஜராத்தில் கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் நகரங்களில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. கடந்த 2017-ல் முதல் கட்ட தேர்தலில் 66.79 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இந்த தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு 63.3 சதவீதம் ஆகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.