சமூகங்களின் இட ஒதுக்கீடு மனுக்கள் மீது அவசரகதியில் அறிக்கை வழங்க முடியாது
சமூகங்களின் இட ஒதுக்கீடு மனுக்கள் மீது அவசரகதியில் அறிக்கை வழங்க முடியாது என்று கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் கூறியுள்ளார்.
பெங்களூரு:-
கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் ஜெயப்பிரகாஷ் ஹெக்டே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பொருளாதார நிலைகள்
கர்நாடகத்தில் பவ்வேறு சாதி, சமூகங்கள் உள்ளன. இந்த சமூகங்கள் இட ஒதுக்கீடு கோரி 133 மனுக்களை கொடுத்துள்ளன. அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு முன்பு அந்த சமூகத்தினர் வாழும் இடங்களுக்கு நேரில் சென்று அவர்களின் வாழ்விடங்களை ஆய்வு செய்தல், பொருளாதார நிலையை பரிசீலனை செய்தல் போன்ற பணிகளை நாங்கள் ஆய்வு செய்கிறோம்.
அவர்களின் சமூக-பொருளாதார நிலைகளை நேரில் பார்வையிடுகிறோம். அதன்படி பணிகளை மேற்கொண்டு மொத்தம் 34 அறிக்கைகளை தயாரித்துள்ளோம். இன்னும் 42 மனுக்கள் மீது அறிக்கை தயாரிக்க வேண்டியுள்ளது. 57 மனுக்கள் மீதான அறிக்கை ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது. காடுகொல்லா, ஹட்டிகொல்லா, கஞ்சிர் பாட், கஞ்சர், கஞ்சார் பாட், சப்பர்ந்த், குடுபி, முகாரி, முமாரி, நாயிந்த, பொம்மல, சென்னதாசர், மருத்துவர், நாயர், பரியாள, ராமஷத்திரிய, மடிஒக்கலிக, ஜோகார், சவுராசியா சமூகங்கள் குறித்து நாங்கள் ஆய்வு செய்து அறிக்கை வழங்கியுள்ளோம்.
இடைக்கால அறிக்கை
லிங்காயத் குடு ஒக்கலிகர், ஆதிபனஜிக, நுலம்ப, மல்லவ, மலேகவுடா, லிங்காயத் ரெட்டி, கவுடா லிங்காயத், சிவசிம்பி, பனகார், சிவாசார நகர்தி, 24 மனை தெலுங்கு செட்டி, கன்னட வைசியா சமூகங்கள் குறித்து அறிக்கை தயாரித்துள்ளோம். இந்த அறிக்கைகள் அச்சிடும் நிலையில் உள்ளன. அந்த அறிக்கைகளை விரைவில் அரசுக்கு தாக்கல் செய்வோம்.
பஞ்சமசாலி சமூகம் குறித்த இடைக்கால அறிக்கை ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் இறுதி அறிக்கை வழங்கவில்லை. இதுபோன்ற அறிக்கைகளை அவசரகதியில் வழங்க முடியாது. வேலை வாய்ப்பு இட ஒதுக்கீட்டிற்கு பெற்றோரின் வருமானத்தை மட்டும் கணக்கில் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு ஜெயப்பிரகாஷ் ஹெக்டே கூறினார்.