பெண்ணை கொலை செய்த உத்தரபிரதேச தொழிலாளி கைது
ரூ.2 ஆயிரம் கடன் கேட்டதால் பெண்ணை கொலை செய்த உத்தரபிரதேச தொழிலாளியை சிவமொக்கா போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிவமொக்கா:-
கேமரா காட்சிகள்
சிவமொக்கா டவுன் பகுதியை சேர்ந்தவர் சாவித்திரி (வயது 45). இவர் அந்த பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த ஆண்டு (2022) நவம்பவர் மாதம் விடுதியின் அருகே மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற டவுன் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து விடுதி அருகே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது சாவித்திரி பிறவியிலேயே வாய் பேச முடியாதவர். அவர் விடுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது விடுதிக்கு உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஜோகிந்தர் (வயது 40) என்பவர் டைல்ஸ் ஒட்டும் வேலைக்கு வந்துள்ளார்.
தலைமறைவு
அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜோகிந்தரிடம் ரூ.2 ஆயிரம் கடன் தருமாறு சாவித்திரி கேட்டுள்ளார். அதற்கு ஜோகிந்தர் பணம் இல்லை என கூறி தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதையடுத்து சாவித்திரி இதுகுறித்து விடுதியில் உள்ளவர்களிடம் புகார் அளிப்பதாக செய்கை மூலம் கூறி உள்ளார்.
அப்போது ஆத்திரமடைந்த ஜோகிந்தர், சாவித்திரியை விடுதியின் பின்னால் அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பித்து சொந்த மாநிலத்திற்கு ஓடி தலைமறைவாகியது தெரிந்தது. அவரை போலீசார் செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
சிறையில் அடைப்பு
இதற்கிடையே சாவித்திரியை கொலை செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது சகோதரர் ரமேஷ் துங்கா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் துங்கா போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சிவமொக்கா போலீசார் உத்தரபிரதேசத்திற்கு சென்று கார்கா கிராமத்தில் பதுங்கி இருந்த ஜோகிந்தரை கைது செய்து பெங்களூருவுக்கு விமானம் மூலம் அழைத்து வந்தனர். பின்னர் அங்கிருந்து சிவமொக்காவுக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.