கர்நாடகத்தில் மூளை காய்ச்சல் பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி
கர்நாடகத்தில் மூளை காய்ச்சல் பரவலை தடுக்க இன்று (திங்கட்கிழமை) முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்குவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
பெங்களூரு:-
இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மூளை காய்ச்சல் தடுப்பூசி
கர்நாடகத்தில் ஜே.இ.மூளை காய்ச்சல் (ஜபானீஸ் என்செபலைடிஸ்) நோய் பரவலை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாநிலத்தில் 1 முதல் 15 வரை உள்ள 45 லட்சம் குழந்தைகளுக்கு இந்த மூளை காய்ச்சலுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இந்த மூளை காய்ச்சல் "பிளேவிவைரஸ்'' என்ற வைரஸ் மூலம் பரவுகிறது. இந்த வைரஸ் 'குலெக்ஸ்' கொசுக்கள் மூலம் பரவுகிறது.
பன்றிகள், காட்டு பறவை இனங்களில் தான் இத்தகைய வைரஸ் அதிகம் தென்படுகிறது. அது கடைசி நிலையில் தான் மனிதர்களை தாக்குகிறது. இந்த தடுப்பூசி போடும் பணி நாளை(இன்று) தொடங்குகிறது. அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் போடப்படும். அதன் பிறகு சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்கள், சமுதாய மையங்களில் இந்த தடுப்பூசி போடப்படும்.
மனநல பாதிப்பு
மத்திய அரசு இந்த தடுப்பூசியை இலவசமாக வழங்கியுள்ளது. உலகம் முழுவதும் 24 நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. இதில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. ஆண்டுதோறும் 68 ஆயிரம் குழந்தைகளுக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. நோய் பாதித்தவர்களில் 20 முதல் 30 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். குணம் அடைந்தவர்களில் சுமார் 50 சதவீதம் பேருக்கு நரம்பு தளர்ச்சி, மனநல பாதிப்பு உள்ளிட்ட பாதிப்பு நிரந்தரமாக ஏற்பட்டுள்ளது.
இந்த வைரஸ் முதன் முதலில் 1955-ம் ஆண்டு தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் பரவியது கண்டறியப்பட்டது. கர்நாடகத்தில் 1978-ம் ஆண்டு கோலாரில் முதல் முறையாக ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டது. இந்த வைரசால் 15 வயக்கு உட்பட்ட குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கர்நாடகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு 11 பேருக்கும், 2017-ம் ஆண்டு 23 பேருக்கும், 2018-ம் ஆண்டு 35 பேருக்கும், 2019-ம் ஆண்டு 33 பேருக்கும், 2020-ம் ஆண்டு 19 பேருக்கும், 2021-ம் ஆண்டு 25 பேருக்கும், நடப்பு ஆண்டில் இதுவரை 21 பேருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எதிராக போர்
இந்த நோய் பாதிப்பை கண்டறிய சென்டினல் சர்வேலன்ஸ் ஆய்வு கூடத்தை திறக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நிமான்ஸ் ஆஸ்பத்திரி, பல்லாரி விம்ஸ், உப்பள்ளி கிம்ஸ், கோலார், உடுப்பி மணிப்பால் ஆஸ்பத்திரி, பெங்களூரு தேசிய வைரலாஜி நிறுவனம் ஆகியவற்றில் உள்ள சோதனை கூடத்தில் இந்த வைரஸ் பாதிப்பை கண்டுபிடிக்கும் வசதி உள்ளது.
பல்லாரி, ராய்ச்சூர், கொப்பல், விஜயாப்புரா, சிக்பள்ளாப்பூர், கோலார், மண்டியா, தார்வார், சித்ரதுர்கா மற்றும் தாவணகெரே ஆகிய 10 மாவட்டங்களில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் 89 மாதம் நிறைவடைந்த பிறகு முதல் டோஸ், 1½ வயதுக்கு பிறகு 2-வது டோஸ் போடப்படும். மத்திய சுகாதாரத்துறையின் உத்தரவுப்படி, பாகல்கோட்டை, தட்சிண கன்னடா, கதக், ஹாசன், ஹாவேரி, கலபுரகி, துமகூரு, ராமநகர், உடுப்பி மற்றும் யாதகிரி மாவட்டங்களிலும் தடுப்பூசி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மூளை காய்ச்சலுக்கு எதிராம் நாம் போரிட வேண்டியுள்ளது. இதற்காக சுகாதாரத்துறை அனைத்து ரீதியிலும் தயாராகியுள்ளது.
இவ்வாறு சுதாகர் கூறினார்.