அரசு பள்ளி மாணவர்களை அழைத்து வர வேன் வசதி- கர்நாடக அரசு முடிவு


அரசு பள்ளி மாணவர்களை அழைத்து வர வேன் வசதி-  கர்நாடக அரசு முடிவு
x

மாணவர்களை அழைத்து வர வசதியாக கர்நாடகத்தில் உள்ள 54 ஆயிரம் அரசு பள்ளிகளுக்கு வேன் வழங்க அரசு முடிவு செய்து உள்ளது.

பெங்களூரு: மாணவர்களை அழைத்து வர வசதியாக கர்நாடகத்தில் உள்ள 54 ஆயிரம் அரசு பள்ளிகளுக்கு வேன் வழங்க அரசு முடிவு செய்து உள்ளது.

65 லட்சம் மாணவர்கள்

கர்நாடகத்தில் 48 ஆயிரத்து 285 அரசு பள்ளிகளும், 6,312 அரசு உதவி பெறும் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் 65 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். கிராமப்புறங்களில் குறைந்த அளவில் தான் அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் கிராமப்புற மாணவர்கள் கல்வி பயில நகரங்களுக்கு வர வேண்டி உள்ளது. ஆனால் கிராமப்புறங்களில் இருந்து நகருக்கு வந்து கல்வி பயில மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி பெரும் தடையாக உள்ளது.

மலைநாடு, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம், வனப்பகுதி, கல்யாண கர்நாடக மற்றும் சில வடகர்நாடக மாவட்டங்களில் கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவர்கள் போக்குவரத்து வசதி இல்லாததால் நகரங்களுக்கு வந்து கல்வி பயில தடை ஏற்படுகிறது. மேற்கண்ட பகுதிகளில் இருந்து பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் ஏதாவது ஒரு வாகனத்தின் உதவியை தான் நாட வேண்டி உள்ளது.

வேன்கள் வழங்க அரசு முடிவு

இதனால் பெரும்பாலான கிராமப்புற பகுதிகளில் மாணவர்கள் பாதியிலேயே படிப்பை விட்டு விடுகின்றனர். இதனை தடுக்க 2007-ம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது.

ஆனால் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படவில்லை. போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையும் வெகுவாக குறைந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வேன்கள் வழங்க அரசு முடிவு செய்து உள்ளது.

மந்திரி பேட்டி

இதுகுறித்து பள்ளிகல்வி துறை மந்திரி பி.சி.நாகேஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மாணவர்களை அழைத்து வர வேன்கள் வழங்க அரசு முடிவு உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் நிதியில் இருந்து வேன்கள் வாங்கப்படும். வேன் ஓட்டுநர் சம்பளம், எரிபொருள், வேனின் பராமரிப்பு செலவு, டீசல் உள்ளிட்டவைகளை பள்ளி வளர்ச்சி குழுவினர் பார்த்து கொள்ள வேண்டும்.பள்ளிகளுக்கு வேன் வாங்க நன்கொடையாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரிடமும் உதவி கேட்கப்படும். எனது சொந்த தொகுதியான திப்தூரில் கூட்டுறவு சங்கம் உதவியுடன் பள்ளிக்கு வேன் வழங்கி உள்ளேன் என்றார்.


Next Story