வாரணாசி குண்டுவெடிப்பு வழக்கு: பயங்கரவாதிக்கு தூக்குதண்டனை கோர்ட்டு அதிரடி தீர்ப்பு


வாரணாசி குண்டுவெடிப்பு வழக்கு: பயங்கரவாதிக்கு தூக்குதண்டனை கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
x

28 பேரை பலி கொண்ட வாரணாசி குண்டு வெடிப்பு வழக்கில் பயங்கர வாதிக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது.

லக்னோ,

கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் 7-ந் தேதி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை உலுக்கும் வகையில் 2 குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன.

2 குண்டு வெடிப்புகள்

அன்றைய தினம் மாலை 6 மணி அளவில் வாரணாசியில் உள்ள சங்கத் மொச்சான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. அப்போது, அங்கு பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது.

பக்தர்கள் அலறியடித்து ஓடினர். பலர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். பலத்த பாதுகாப்பையும் மீறி, இந்த குண்டு வெடிப்பு நடந்தது.

அங்கு குண்டு வெடித்த 15 நிமிடம் கழித்து, வாரணாசி கன்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் முதல் வகுப்பு பயணிகள் ஓய்வறைக்கு வெளியே சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.

ரெயிலுக்காக காத்துக்கொண்டிருந்த பயணிகள் பீதியடைந்து அங்கும், இங்கும் ஓடினர்.

28 பேர் பலி

மேற்கண்ட 2 இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் 28 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து, கோடாலியா பகுதியில் உள்ள ரெயில்வே கிராசிங்கில் தண்டவாள பகுதியில் ஒரு குக்கர் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. நல்லவேளையாக அந்த குண்டு வெடிக்கவில்லை.

பயங்கரவாதி கைது

உத்தரபிரதேசத்தையே உலுக்கிய இந்த தொடர் குண்டுவெடிப்புகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தீவிர விசாரணை நடத்தி, வலியுல்லா கான் என்ற பயங்கரவாதிக்கு தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தது.

அவர் உத்தரபிரதேசத்தின் பிரக்யாராஜை சேர்ந்தவர். அவரை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்தது. அவர் வங்காளதேசத்தை சேர்ந்த ஹர்கத் உல் ஜிகாத் அல் இஸ்லாமி என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.

3 வழக்குகள்

வலியுல்லா கான் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கொலை, கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகளும், வெடிபொருள் சட்டத்தின் கீழ் பல்வேறு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன. அவர் மீது மொத்தம் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

முதலில் இந்த வழக்கு அலகாபாத் ஐகோர்ட்டில் விசாரிக்கப்படுவதாக இருந்தது. ஆனால், அங்கு வாரணாசி வக்கீல்கள் யாரும் ஆஜராக மறுத்துவிட்டனர்.

இதையடுத்து, காசியாபாத்தில் உள்ள மாவட்ட செசன்சு கோர்ட்டுக்கு வழக்கு மாற்றப்பட்டது. 3 வழக்குகளிலும் மொத்தம் 121 சாட்சிகள் கோர்ட்டில் நிறுத்தப்பட்டனர்.

குற்றவாளி என்று தீர்ப்பு

16 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கு விசாரணை சமீபத்தில் முடிவடைந்தது. கடந்த 4-ந் தேதி காசியாபாத் மாவட்ட செசன்சு கோர்ட்டு நீதிபதி ஜிதேந்திர குமார் சின்கா தீர்ப்பு அளித்தார்.

2 வழக்குகளில், பயங்கரவாதி வலியுல்லா கான் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அந்த வழக்குகளில் அவர் குற்றவாளி என்று அறிவித்தார்.

3-வது வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால், வலியுல்லா கானை விடுதலை செய்தார்.

தண்டனை விவரங்கள் 6-ந் தேதி (நேற்று) அறிவிக்கப்படும் என்று நீதிபதி கூறினார்.

தூக்கு தண்டனை

அதன்படி, தண்டனை அறிவிப்புக்காக காசியாபாத் மாவட்ட செசன்சு கோர்ட்டு நேற்று பிற்பகல் 2 மணிக்கு கூடியது.

வலியுல்லா கானுக்கு ஒரு வழக்கில் தூக்கு தண்டனையும், மற்றொரு வழக்கில் ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி ஜிதேந்திர குமார் சின்கா உத்தரவிட்டார்.

குண்டு வெடிப்புகள் நடந்து 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Next Story