மண்டியாவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி
சட்டசபை தேர்தலையொட்டி மண்டியாவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது. இதனை கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி நேரில் ஆய்வு செய்தார்.
மண்டியா:-
மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்
கர்நாடகத்தில் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி மண்டியா மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதனை மாவட்ட கலெக்டர் கோபாலகிருஷ்ணா தொடங்கி வைத்தார். நேற்று முன்தினம் தொடங்கிய இந்த பணி வருகிற 5-ந்தேதி வரை 6 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணியை நேற்று முன்தினம் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேந்திர சோழன், மண்டியாவில் உள்ள பாதுகாப்பு அறைக்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கலெக்டரிடம் தகவல்களை கேட்டறிந்து கொண்டார்.
முதல் நிலை சரிபார்ப்பு
இதுகுறித்து கலெக்டர் கோபாலகிருஷ்ணா கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு (எப்.எல்.சி.) பணி தொடங்கப்பட்டுள்ளது. மண்டியா மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி. பேட் எந்திரங்கள் முறையாக செயல்படுவது குறித்து சரிபார்க்கப்பட்டு வருகிறது.
இன்று (அதாவது நேற்று முன்தினம்) முதல் 6 நாட்கள் இந்த சரிபார்ப்பு பணி நடக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் முன்னிலையில் 6 நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த சரிபார்ப்பு பணி நடக்கும். இந்த சரிபார்ப்பு பணிக்காக ஐதராபாத்தில் இருந்து 24 நிபுணர்கள் கொண்ட குழு மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செயல்திறன்
96 வாக்குகளை பதிவு செய்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டது. ஒருநாளைக்கு 22 மேஜைகளில் 350 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்படும். அதன்பின்னர் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்திய தேர்தல் ஆணையத்தால் மண்டியாவுக்கு 3,359 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. மண்டியாவுக்கு வந்துள்ள அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்திறனை நாங்கள் சோதித்து வருகிறோம்
இவ்வாறு அவர் கூறினார்.