பெற்றோர் இறந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில் வீட்டின் மாடியில் இருந்து குதித்த நைஜீரிய நபர்


பெற்றோர் இறந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில் வீட்டின் மாடியில் இருந்து குதித்த நைஜீரிய நபர்
x

பெற்றோர் இறந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில் நைஜீரிய நபர் ஒருவர் வீட்டின் மாடியில் இருந்து குதித்த வீடியோ வைரலாகி வருகிறது.

புதுடெல்லி,

டெல்லியின் நிஹால் விகார் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் வசித்து வந்த 37 வயது நைஜீரிய நபர் ஒருவர், இரண்டாவது மாடியில் இருந்து குதித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அவர் பால்கனியில் சிறிது நேரம் தொங்கிக்கொண்டிருந்து, பின்னர் கீழே விழுந்து வலியால் துடிக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் கடந்த 18-ம் தேதி நடந்துள்ளது. அந்த நபரின் பெயர் டினோஜூவோ. நைஜீரியாவில் வசித்து வந்த அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த டினோஜூவோ வீட்டின் பால்கனியில் இருந்து குதித்துள்ளார். இதில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

டினோஜூவோ கட்டிடத்திலிருந்து விழுந்தவுடன், ஒரு நபர் உடனடியாக அவருக்கு உதவி செய்ய சென்றார். ஆனால் அந்த நபரை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட டினோஜூவோ விட மறுத்துள்ளார். உதவி செய்ய சென்றவர் தன்னை விடுவித்துக்கொள்ள போராடுவதை அறிந்த மக்கள், டினோஜூவோவை அடித்து உதைத்து விடுவித்தனர்.

பின்னர் போலீசார் வந்து டினோஜோவை மீட்டு சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.


Next Story