சட்டசபை தேர்தலில் வருணா தொகுதியில் சித்தராமையாவை எதிர்த்து விஜயேந்திரா போட்டி?; பா.ஜனதா ஆலோசனை


சட்டசபை தேர்தலில் வருணா தொகுதியில் சித்தராமையாவை எதிர்த்து விஜயேந்திரா போட்டி?; பா.ஜனதா ஆலோசனை
x
தினத்தந்தி 19 March 2023 12:15 AM IST (Updated: 19 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தலில் வருணா தொகுதியில் சித்தராமையாவை எதிர்த்து விஜயேந்திராவை நிறுத்த பா.ஜனதா ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:

வருணாவில் சித்தராமையா

கர்நாடக சட்டசபைக்கு எந்த நேரமும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம். இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கோலார் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் காங்கிரஸ் தலைமையின் உத்தரவு காரணமாக கோலார் தொகுதியில் இருந்து மைசூரு மாவட்டம் வருணா தொகுதியில் போட்டியிட சித்தராமையா தயாராகி வருகிறார்.

இந்த நிலையில், வருணா தொகுதியில் சித்தராமையா போட்டியிட்டால், அவரை எதிர்த்து பா.ஜனதா மாநில துணைத் தலைவரும், எடியூரப்பாவின் மகனுமான விஜயேந்திராவை வேட்பாளராக நிறுத்த பா.ஜனததா ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ள எடியூரப்பா சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுரா தொகுதியில் விஜயேந்திரா போட்டியிடுவார் என்று அறிவித்திருந்தார்.

விஜயேந்திராவை நிறுத்த முடிவு?

அதுபற்றி பா.ஜனதா மேலிடம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. தற்போது கர்நாடக சட்டசபை தேர்தலில் திடீர் திருப்பமாக வருணா தொகுதியில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா போட்டியிட இருப்பதால், அவரை எதிர்த்து விஜயேந்திரா நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த சட்டசபை தேர்தலில் சித்தராமையாவின் மகன் யதீந்திராவுக்கு எதிராக வருணா தொகுதியில் போட்டியிட விஜயேந்திரா ஆயத்தமாகி வந்தார். கடைசி நேரத்தில் அவருக்கு டிக்கெட் கிடைக்காமல் போனது.

இதனால் தற்போது வருணாவில் சித்தராமையா களம் இறங்குவதால், அவருக்கு எதிராக விஜயேந்திராவை நிறுத்துவது குறித்து பா.ஜனதா தலைமை சிந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. விஜயேந்திரா போன்று வலுவான வேட்பாளரை நிறுத்தினால், சித்தராமையா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வது தடுக்கப்பட்டு, வருணா தொகுதியில் கவனம் செலுத்தும் நிலை ஏற்படாலாம். ஏனெனில் அங்கு லிங்காயத் உள்ளிட்ட பல சமுதாய ஓட்டுக்கள் உள்ளதால், விஜயேந்திராவை நிறுத்தும் முடிவை பா.ஜனதா எடுக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story