வருணா சட்டசபை தொகுதியில் சித்தராமையாவுக்கு எதிராக விஜயேந்திரா போட்டி?


தினத்தந்தி 31 March 2023 12:15 AM IST (Updated: 31 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வருணா சட்டசபை தொகுதியில் சித்தராமையாவுக்கு எதிராக விஜயேந்திரா போட்டி?.

கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் தேர்தல் களத்தில் அனல் பறக்க தொடங்கிவிட்டது. அதுபோல் முக்கிய தலைவர்கள் எந்த தொகுதியில் போட்டியிட போகிறார்கள் என எதிர்பார்ப்பும் எகிறி வருகிறது.

இதில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா ஒரு தொகுதியில் போட்டியிடுவாரா அல்லது 2 தொகுதிகளில் போட்டியிடுவாரா என காங்கிரசார் மட்டுமின்றி பா.ஜனதா மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சிகளும் உற்று நோக்கி வருகிறது. ஏனெனில் இரு கட்சிகளும் தங்களது அரசியல் வைரியான சித்தராமையாவை வீழ்த்த வரிந்து கட்டிக்கொண்டு உள்ளன. இத்தகைய பரபரப்புக்கு மத்தியில், கோலாரில் போட்டியிடுவதாக சித்தராமையா அறிவித்தார். ஆனால் கோலாரில் வெற்றி சுலபமல்ல என மேலிடம் கூறியது. இதனால் சித்தராமையா தனது சொந்த தொகுதியான மைசூரு வருணாவில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல் கோலார் தொகுதியிலும் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் கடந்த சட்டசபை தேர்தலில் அவர் சாமுண்டீஸ்வரி மற்றும் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதியில் போட்டியிட்டார். இதில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வி அடைந்தார். பாதாமியிலும் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்ரீராமுலுவை வீழ்த்தினார். இதனால் சித்தராமையா பல கேள்வி கணைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

அதே நிலை தற்போதும் சித்தராமையாவுக்கு ஏற்பட்டு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஏனெனில் வருணா தொகுதியில் போட்டியிடும் சித்தராமையாவுக்கு எதிராக பா.ஜனதா மூத்த தலைவர் எடியூரப்பா மகன் விஜயேந்திராவை களமிறக்க அக்கட்சி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அவர் சொந்த தொகுதியில் போட்டியிட்டால், மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய ஏதுவாக இருக்கும் என்றும், சொந்த தொகுதியில் சில நாட்கள் பிரசாரம் செய்தால் வெற்றி பெற்றுவிடலாம் என காங்கிரஸ் கட்சி கணக்குபோட்டுள்ளது. எனவே சித்தராமையாவுக்கு எதிராக விஜயேந்திராவை நிறுத்தினால், அவரால் வெளிமாவட்ட பிரசாரத்திற்கு செல்ல முடியாமல் முடக்கிவிடலாம், இதன் மூலம் பல தொகுதிகளில் பா.ஜனதாவின் வெற்றி சுலபம் என அக்கட்சி மேலிடம் கருதுகிறது.


Next Story