5 வாக்குறுதி திட்டங்கள் மூலம் கிராம மக்கள் பயனடைந்து உள்ளனர்-மந்திரி என்.எஸ்.போசராஜு பேச்சு
கர்நாடக காங்கிரஸ் அரசின் 5 வாக்குறுதி திட்டங்கள் மூலம் கிராம மக்கள் பயனடைந்து உள்ளதாக மந்திரி என்.எஸ்.போசராஜு கூறினார்.
குடகு:-
இலவச மின்சாரம்
குடகு மாவட்டம் மடிகேரியில் உள்ள அம்பேத்கர் பவனில் நேற்று மின்சார துறை, சாமுண்டீஸ்வரி மின்சார வாரியம் ஆகியவை சார்பில் கிரக ஜோதி திட்டத்தின் தொடக்க விழா நடந்தது. இதில் மாவட்ட பொறுப்பு மந்திரி என்.எஸ்.போசராஜு கலந்து கொண்டு வீடுகளுக்கு மாதந்தோறும் தலா 200 யூனிட் இலவச மின்சாரம் பெறும் கிரகஜோதி திட்டத்தை தொடங்கி வைத்து, பூஜ்ஜிய மின்கட்டணம் வந்த நபர்களுக்கு அதற்கான ரசீதுகளை வழங்கினார். பின்னர் அவர் விழாவில் பேசியதாவது:-
மாநிலம் மற்றும் தேசிய அளவில் எந்தவித பாகுபாடும் இல்லாமல் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டால் தான் மக்கள் முன்னேற்றம் அடைவார்கள். கர்நாடக அரசு அறிவித்த 5 வாக்குறுதி திட்டங்களில் தற்போது 4 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன மீதமுள்ள ஒரு திட்டத்தையும் விரைவில் அமல்படுத்துவோம். இந்த திட்டங்கள் மூலம் கிராம மக்கள் பயனடைந்து உள்ளனர்.
நடவடிக்கை எடுக்கப்படும்
குடகு மாவட்டத்தில் இலவச மின்சாரம் பெறும் திட்டத்திற்கு 1.30 லட்சம் பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள். அவர்களுக்கான மின்சார தொகை ரூ.2.90 கோடியை அரசு சாமுண்டீஸ்வரி மின்சார வாரியத்திற்கு கொடுத்துள்ளது. அன்னபாக்ய, சக்தி, கிரகலட்சுமி திட்டங்களுக்காக வருடத்திற்கு அரசு ரூ.60 ஆயிரம் கோடியை செலவிட திட்டமிட்டு இருக்கிறது. வருகிற டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து திட்டங்களும் அமலுக்கு வந்துவிடும்.
தற்போது நாட்டில் விலைவாசி உயர்ந்துள்ளது. அதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது. அடுத்து நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடித்தால் விலைவாசியை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.