புலி நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதி


புலி நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதி
x

புலி நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதி அடைந்து வனத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை

குடகு;

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா மால்தாரே கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் கிராம மக்கள் பீதியில் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மால்தாரே கிராமத்தின் வழியாக செல்லும் பிரியப்பட்டணா-சித்தாப்புரா சாலையில் அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் காரில் சென்றுள்ளனர். அப்போது அந்த சாலையில், புலி ஒன்று சென்றுள்ளது. இதனை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த புலியை தங்கள் செல்போனில் வீடியோவும் எடுத்து கொண்டனர்.

இதுதொடர்பாக அவர்கள் வனத்துறையினருக்கு தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது அங்கு பதிவாகி இருந்த கால்தடங்களை வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

அது புலியின் கால்தடம் என்பது உறுதி செய்யப்பட்டது. அந்தப்பகுதியில் புலி நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். மேலும் புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story