வனத்துறை அலுவலகத்தை சூறையாடிய கிராம மக்கள்
மூடிகெரே அருகே காட்டுயானைகளை சிறை பிடிக்காததால் அதிருப்தியடைந்த கிராம மக்கள், வனத்துறை அலுவலகத்தை சூறையாடிய சம்பவம் நடந்துள்ளது.
சிக்கமகளூரு:-
காட்டுயானைகள் அட்டகாசம்
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகாவில் குந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதற்கிடையே 3 காட்டுயானைகள் குந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை ஒட்டிய கிராமங்களில் முகாமிட்டு அட்டகாசம் செய்து வந்தது. மேலும் கடந்த 20-ந் தேதி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானை தாக்கியதில் ஷோபா என்ற பெண் உயிரிழந்தார்.
இதனால் பீதிக்குள்ளான கிராம மக்கள், காட்டுயானைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து வனத்துறையினர், அரசு அனுமதியுடன் கும்கிகளை வரவழைத்து காட்டுயானைகளை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால் கும்கிகளுக்கு உடல்நலக்குறைவால் ஏற்பட்டதால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் காட்டுயானைகளை பிடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. தற்போது காட்டுயானைகளை பிடிக்கும் பணியை வனத்துறையினர் கைவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வனத்துறை அலுவலகம் சூறையாடல்
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகத்தை கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள், பொதுமக்கள் சூறையாடினர். அதாவது காட்டுயானைகளை பிடிக்காத வனத்துறையினருக்கு அலுவலகம் எதற்கு என்று கூறிய அவர்கள் அங்கிருந்த நாற்காலி, மேஜை உள்ளிட்ட பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர். இதையடுத்து வனத்துறையினர் சமாதானப்படுத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.