தாவரேகொப்பா உயிரியல் பூங்காவில் குப்பைகளை அகற்றிய தன்னார்வலர்கள்
தாவரேகொப்பா உயிரியல் பூங்காவில் குப்பைகளை அகற்றிய தன்னார்வலர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்
சிவமொக்கா:
சிவமொக்கா நகரை ஒட்டிய தாவரேகொப்பாவில் உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு சிங்கம், புலி உள்ளிட்ட வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவ்வாறு உயிரியல் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள், அதிகளவு குப்பைகளை வீசிவிட்டு செல்வதாக கூறப்படுகிறது. குறிப்பாக தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள் ஆகியவற்றை வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் உயிரியல் பூங்காவில் குப்பை கழிவுகள் குவிந்தது. இந்நிலையில் இந்த குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாவட்ட மற்றும் தாலுகா பஞ்சாயத்து ஊழியர்கள் ஆகியோர் முன் வந்தனர்.
அதன்படி நேற்று உயிரியல் பூங்காவிற்கு சென்ற அவர்கள், தண்ணீர் பாட்டீல் மற்றும் பிற குப்பைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சுமார் 2 கி.மீ தொலைவு வரை இருந்த குப்பை கழிவுகள் அகற்றப்பட்டது. தாவரகொப்பா உயிரியல் பூங்காவில் குப்பை கழிவுகளை அகற்றிய தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் தாலுகா பஞ்சாயத்து நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.