பொதுமக்களுக்கு நிலப்பட்டா வழங்கக்கோரி நிடுவாலா கிராம பஞ்சாயத்து துணைத் தலைவர் போராட்டம்
பொதுமக்களுக்கு நிலப்பட்டா வழங்கக்கோரி நிடுவாலா கிராம பஞ்சாயத்து துணைத் தலைவர் போராட்டம் நடத்தினர்.
சிக்கமகளூரு-
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா நிடுவாலா கிராம பஞ்சாயத்து துணை தலைவராக நவீன் இருந்து வருகிறார். இந்தநிலையில், நிடுவால கிராம பஞ்சாயத்தில் வசித்து வரும் 100-க்கும் மேற்பட்டோர்களுக்கு நிலப்பட்டா இல்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் நிலப்பட்டா வழங்கக்கோரி நிடுவாலா கிராம பஞ்சாயத்து துணை தலைவர் நவீனிடம் மனு அளித்தனர்.
இதற்கு நடவடிக்கை எடுப்பதாக துணை தலைவர் அவர்களிடம் உறுதியளித்தார். இந்தநிலையில் கடந்த சில மாதங்கள் ஆகியும் அப்பகுதி மக்களுக்கு நிலப்பட்டா வழங்கவில்லை. இதனால் நிலப்பட்டா கேட்டவர்கள் கோபம் அடைந்து துணை தலைவர் நவீனிடம் கேட்டனர். அதற்கு அவர் நிலப்பட்டா வழங்குவதற்கு மூடிகெரே தாசில்தாரிடம் தான் அதிகாரம் உள்ளது என கூறினார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மூடிகெரே டவுனில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு நவீன் வந்தார். பின்னர் அலுவலகம் எதிரே கையில் பதாகைகளை ஏந்தி அவர் போரட்டம் நடத்தினர். அப்போது நவீன் கூறுகையில், நிடுவாலா கிராம பஞ்சாயத்து பகுதி மக்கள் நிலப்பட்டா வேண்டும் என என்னிடம் மனு கொடுத்தனர்.
ஆனால் நிலப்பட்டா வழங்காததால் அவர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. எனவே நிடுவாலா கிராம பஞ்சாயத்தில் வசிக்கும் மக்களுக்கு நிலப்பட்டா வழங்க தாசில்தார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பின்னர் நவீன் தாசில்தார் நரேந்திராவிடம் மனு அளித்தார்.