பிரவீன் நெட்டார் கொலையில் தேடப்படும் 6 பேர் சரணடைய என்.ஐ.ஏ. மீண்டும் 'கெடு'


பிரவீன் நெட்டார் கொலையில் தேடப்படும்  6 பேர் சரணடைய என்.ஐ.ஏ. மீண்டும் கெடு
x
தினத்தந்தி 18 July 2023 12:15 AM IST (Updated: 18 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் தேடப்படும் 6 பேருக்கும் மீண்டும் ‘கெடு’ விதித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

பெங்களூரு-

பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் தேடப்படும் 6 பேரும் ஆகஸ்டு 18-ந் தேதிக்குள் சரணடைய கூறி மீண்டும் 'கெடு' விதித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

பிரவீன் நெட்டார் படுகொலை

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா நெட்டார் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன் நெட்டார் .இவர் அப்பகுதியில் இறைச்சி கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். மேலும் இவர் பா.ஜனதா இளைஞர் அணி நிர்வாகியாகவும் இருந்து வந்தார். கடந்த ஆண்டு(2022) ஜூலை மாதம் 26-ந் தேதி இவர் வியாபாரம் முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது இவரை மர்ம நபர்கள் கடத்திச் சென்று பெல்லாரே பகுதியில் வைத்து படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சுள்ளியா போலீசார் வழக்குப்பதிவு செய்து முதலில் சியாபுத்தீன் என்கிற சியாப்(வயது 32), ரியாஸ் அங்கடகர்(27), பஷீர்(29) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்த வேளையில், பிரவீன் நெட்டார் கொலை வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்தக்கோரி இந்து அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்தன. அதையடுத்து இந்த வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

தேசிய புலனாய்வு முகமை

அப்போது பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ.) அமைப்பினருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசாரும், அப்போதைய அரசும்(பா.ஜனதா ஆட்சி) இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) விசாரணை அமைப்பிடம் ஒப்படைத்தனர். அதையடுத்து இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது இக்கொலை வழக்கில் மொத்தம் 21 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அதையடுத்து அவர்களை தேடும் பணியை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிரப்படுத்தினர். மேலும் பெங்களூரு, மங்களூரு, குடகு ஆகிய இடங்களில் பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல்களின் பேரில் அங்கு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

நோட்டீஸ் ஒட்டினர்

அதில் குடகு மாவட்டத்தில் வசித்து வரும் அப்துல் நசீர், அப்துல் ரகுமான், தட்சிண கன்னடா மாவட்டத்தில் வசித்து வரும் நவுசாத் ஆகியோரின் வீடுகளும் அடங்கும். இதுதவிர தமிழ்நாட்டிலும் அவர்கள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கும் சென்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவர்களை தேடினர். ஆனால் அப்துல் நசீர், அப்துல் ரகுமான் மற்றும் நவுசாத் தவிர மேலும் 6 முக்கிய குற்றவாளிகளுக்கு பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதும், அவர்கள் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது. அவர்கள் அனைவரும் தட்சிண கன்னடா மற்றும் குடகு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், பி.எப்.ஐ. பிரமுகர்கள் என்பதும் தெரியவந்தது.

அதையடுத்து கடந்த மாதம்(ஜூன்) 26-ந் தேதி தட்சிண கன்னடாவை சேர்ந்த பி.எப்.ஐ. பிரமுகர்கள் 5 பேரின் வீடு, அலுவலகம், மற்றும் குடகு மாவட்டம் சோமவார்பேட்டையை சேர்ந்த ஒருவரின் வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு எலெக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ஆவணங்களை அவர்கள் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் 6 பேரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், தேடப்படும் நபர்கள் என்று அவர்களின் வீட்டு கதவில் நோட்டீஸ் ஒட்டினர்.

சரண் அடையவில்லை

அதுமட்டுமின்றி கடந்த மாதம் 28-ந் தேதிக்குள் அவர்கள் தேசிய புலனாய்வு முகமை முன்பு சரண் அடைய வேண்டும் என்று கெடு விதித்து அதிகாரிகள் அறிவிப்பை வெளியிட்டனர். ஆட்டோவில் சென்று ஒலிபெருக்கி மூலமும் அறிவித்தனர். ஆனால் அவர்கள் 6 பேரும் சரண் அடையவில்லை. இந்த நிலையில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் நேற்று முன்தினம் பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் தேடப்படும் நபரான உப்பினங்கடி அருகே நெக்கிலாடி கிராமத்தில் வசித்து வரும் மசூட் என்பவரின் வீட்டுக்கு சென்றனர்.

அப்போது அங்கு மசூட் இல்லை. இதனால் அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும் அங்கிருந்து சில முக்கிய ஆவணங்கள், பொருட்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மாநில நிர்வாகி

அதையடுத்து அதிகாரிகள் மசூட்டின் குடும்பத்தினரிடம் அவர் குறித்து விசாரித்தனர். பின்னர் அவரை அடுத்த மாதம்(ஆகஸ்டு) 18-ந் தேதிக்குள் தேசிய புலனாய்வு முகமை முன்பு சரண் அடையக்கூறி வீட்டுக்கதவில் நோட்டீஸ் ஒட்டினர். இதேபோல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் ஏற்கனவே சரண் அடையக்கூறி கெடு விதித்திருந்த மற்ற 5 பேரின் வீடுகளிலும் சோதனை நடத்தி நோட்டீஸ் ஒட்டினர்.

இதுதவிர நெக்கிலாடி பஸ் நிலையம் உள்பட தட்சிண கன்னடா மற்றும் குடகு மாவட்டத்தில் முக்கிய இடங்களில் அவர்கள் 6 பேரும் விரைவில் தேசிய புலனாய்வு முகமை முன்பு சரண் அடைய கூறி நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது. இதில் மசூட் பி.எப்.ஐ. அமைப்பின் மாநில நிர்வாகியாக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் 'கெடு'

முன்னதாக மசூட் உள்ளிட்ட 6 பேரும் ஜூன் மாதம் 28-ந் தேதிக்குள் சரண் அடையக்கூறி கெடு விதித்திருந்த நிலையில் தற்போது ஆகஸ்டு மாதம் 18-ந் தேதிக்குள் சரண் அடையக்கூறி மீண்டும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் கெடு விதித்து இருக்கிறார்கள். தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் பிரவீன் நெட்டார் கொலை வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது.


Next Story