காலையில் படுக்கையை விட்டு எழுவது எவ்வளவு சிரமமான வேலை.. தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ!
அந்த வீடியோவில் ஒரு நாய் கொட்டாவி விட்டு படுக்கையை விட்டு வெளியேற போராடுகிறது.
மும்பை,
காலையில் எழுவதும், படுக்கையை விட்டு வெளியேறுவதும் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு சிரமமான வேலை. பலர் அதிகாலை எழும் பழக்கமில்லாமல், காலையில் நன்றாக தூக்கம் வருவதாக கூறுவதை கேள்விப்பட்டுள்ளோம்.அவர்களை காலையில் சோம்பல் சூழ்ந்துவிடும்.
இதனை குறிப்பிட்டு மஹிந்திரா குழுமத்தின் தலைவர் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வேடிக்கையான வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஒரு லாப்ரடோர் நாய் படுக்கையில் கொட்டாவி விட்டு படுக்கையை விட்டு வெளியேற போராடுகிறது.
அந்த நாய் தனது முன் கால்களை தரையில் நீட்டி படுக்கையில் இருந்து இறங்க முயற்சிக்கிறது. பின் சோபாவை விட்டு கீழே கால்களை பதித்துவிட்டது. அதன் பின் அப்படியே, உறக்க கலக்கத்தில் மீண்டும் தரையில் படுத்து விடுகிறது.
"நான் தினமும் காலையில் படுக்கையில் இருந்து எழ முயற்சிப்பது இப்படித்தான்.." என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட ஆனந்த் மஹிந்திரா, " தினமும் அப்படியல்ல, ஆனால் வார விடுமுறை நாட்களில் இப்படித்தான்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.