நாங்களும், குமாரசாமியும் இணைந்து போராடுவோம்-எடியூரப்பா பரபரப்பு பேட்டி
நாங்களும், குமாரசாமியும் இணைந்து போராடுவோம் என்று எடியூரப்பா பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.
பெங்களூரு:-
அரசியலில் அதிர்வலைகள்
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவும், ஜனதா தளம் (எஸ்) கட்சியும் கூட்டணி அமைக்கும் என்று பேசப்படுகிறது. பா.ஜனதா மீது குமாரசாமி மென்மையாக பேசி வருகிறார். சட்டசபை தேர்தலுக்கு முன்பு வரை மத்திய அரசையும், பா.ஜனதாவையும் குமாரசாமி கடுமையாக விமா்சித்து வந்தார். தேர்தலில் படுதோல்வி அடைந்த பிறகு குமாரசாமி தனது நிலைப்பாட்டை மெதுவாக மாற்றி வருகிறார். அவர் பா.ஜனதாவையும், மத்திய அரசையும் விமர்சிப்பதை நிறுத்திக்கொண்டார். எதிர்க்கட்சிகள் அணியிலும் ஜனதா தளம் (எஸ்) சேரவில்லை. ஒடிசாவில் நடைபெற்ற ரெயில் விபத்தில் மத்திய மந்திரியை எதிர்க்கட்சிகள் கடுமையாக குறை கூறின. ஆனால் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, மத்திய ரெயில்வே மந்திரியின் செயல்பாடுகளை பாராட்டினார்.
இந்த நிலையில் மராட்டியத்தில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித் பவார், திடீரென ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதா கூட்டணிக்கு தாவியுள்ளார். இதனால் அவர் துணை முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ளார். இது இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, "கர்நாடக காங்கிரசில் யார் அஜித் பவார். யாருடைய பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. இந்த நிலை ஏற்பட நீண்ட நாட்கள் ஆகாது. இது இந்த ஆண்டு இறுதிக்குள்ளோ அல்லது நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகே ஏற்பட வாய்ப்புள்ளது" என்றார்.
அது உண்மை
குமாரசாமியின் இந்த கருத்துக்கு பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பா ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறுகையில், "மராட்டிய அரசியல் மாற்றம் குறித்து குமாரசாமி என்ன கூறினாரோ அது உண்மை. அவரது கருத்தை நான் ஆதரிக்க விரும்புகிறேன். வரும் நாட்களில் நாங்களும், குமாரசாமியும் இணைந்து போராடுவோம்" என்றார்.