நாங்கள் பிராமணர்களுக்கு எதிரானவர்கள் இல்லை


நாங்கள் பிராமணர்களுக்கு எதிரானவர்கள் இல்லை
x

நாங்கள் பிராமணர்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்று குமாரசாமி கூறியுள்ளார்.

பெங்களூரு:-

நிலம் ஒதுக்கினேன்

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் விதமாக ஜனதா தளம் (எஸ்) மூத்த தலைவர் குமாரசாமி பஞ்சரத்னா யாத்திரை நடத்தி வருகிறார். அவர் ஏற்கனவே 2 கட்ட யாத்திரையை முடித்துள்ளார். தற்போது அவர் உத்தரக்னடாவில் தனது 3-வது கட்ட பஞ்சரத்னா யாத்திரையை மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று குமடா நகரில் யாத்திரையை தொடங்குவதற்கு முன்பு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள் பிராமணர்களுக்கு எதிரானவர்கள் இல்லை. ராமகிருஷ்ண ஹெக்டேவை முதல்-மந்திரி ஆக்கியது தேவேகவுடா. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது அந்த சமூகத்திற்கு பெங்களூருவில் நிலம் ஒதுக்கி கொடுத்தேன். பிராமணர் மேம்பாட்டு ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த சமூகத்திற்கு பா.ஜனதா என்ன செய்துள்ளது என்பதை கூற வேண்டும்.

மக்களுக்கு தெரியும்

எங்களுக்கு வீரசாவர்க்கர் கலாசாரம் தேவை இல்லை. இந்து மதத்தை நாங்கள் பாதுகாத்துள்ளோம். ஆனால் இந்து மதத்தின் பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள் என்ன செய்தனர் என்பது மக்களுக்கு தெரியும். பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீலுக்கு அரசியல் தெரியாது. சட்டசபை தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். இதை பா.ஜனதாவினர் முடிவு செய்ய முடியாது.

தேர்தல் நேரத்தில் சிலர் கட்சியை விட்டு விலகுவது, சிலர் வேறு கட்சிகளில் இருந்து வந்து சேருவது என்பது சகஜமானது. இதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.


Next Story