நாங்கள் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த மாட்டோம்
நாங்கள் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த மாட்டோம் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு:-
காங்கிரஸ் ஆதரிக்கிறதா?
மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தை பயன்படுத்தி ஊழல்களை பா.ஜனதா அரசு மூடிமறைக்க முயற்சி செய்ததாக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறினார். சர்ச்சையை ஏற்படுத்திய அவரது இந்த கருத்துக்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பயங்கரவாத செயல்களை காங்கிரஸ் ஆதரிக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி, பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி எம்.எல்.ஏ. ஒரு பெரிய பயங்கரவாதி என்று விமர்சித்துள்ளது. இந்த நிலையில் டி.கே.சிவக்குமார் தனது கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
வாக்காளர் பட்டியல் முறைகேடு
மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால் இத்தகைய சம்பவங்களை பா.ஜனதா அரசு பயன்படுத்தி தனது ஊழல்கள் மற்றும் தவறுகளை மூடிமறைக்கிறது. ஊழல் மற்றும் வாக்காளர் பட்டியல் முறைகேடு விவகாரத்தை மூடி மறைக்க குண்டு வெடிப்பு சம்பவத்தை பா.ஜனதா பயன்படுத்தி கொண்டுள்ளது என்று தான் கூறினேன். அதை விடுத்து குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டாம் என்று கூறவில்லை.
மலைநாடு, கடலோர மாவட்டங்களில் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.10 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் போட்டுள்ளதாக அரசு சொல்கிறது. இந்த மலைநாடு மற்றும் கடலோர மாவட்டங்களில் எவ்வளவு முதலீடுகள் வருகின்றன என்பதை கூற வேண்டும். வாக்களித்த மக்களுக்கு நல்லது செய்யாமல் அரசியல் செய்து துரோகம் இழைக்கிறார்கள்.
நியாயப்படுத்த மாட்டோம்
பயங்கரவாதத்திற்கு எங்கள் கட்சி தலைவர்களே பலியாகியுள்ளனர். நாட்டில் ஒருமைப்பாடு, ஒற்றுமை, அமைதியை ஏற்படுத்த நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். நாங்கள் பயங்கரவாதத்தை எப்போதும் நியாயப்படுத்த மாட்டோம். பயங்கரவாதத்தை காங்கிரஸ் ஆதரிப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறுகிறார். தனக்கு மார்க்கெட் கிடைக்க வேண்டும் என்று கருதி அவர் அவ்வாறு பேசுகிறார்.
பா.ஜனதாவில் பசவராஜ் பொம்மை, எடியூரப்பாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எடியூரப்பா கூறிய கருத்தில் அவருக்கு இருக்கும் வேதனை, வலி என அனைத்தும் வெளிப்பட்டது. அவரை கட்சியில் யாரும் மதிப்பது இல்லை. எங்கள் அரசை தள்ளி கொண்டிருக்கிறோம் என்று மந்திரி மாதுசாமி கூறினார். ஆபரேஷன் தாமரையில் பா.ஜனதாவின் டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர். அதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவில் சோ்த்து கொள்ளட்டும். ஒக்கலிகர் சமூகம் தங்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று கேட்கிறது. இதுகுறித்து மடாதிபதிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.