அன்ன பாக்கிய திட்டத்தில் தலா 10 கிலோ அரிசி: மத்திய அரசிடம் கூடுதலாக அரிசி ஒதுக்க கேட்போம் - மந்திரி கே.எச்.முனியப்பா பேட்டி
அன்ன பாக்கிய திட்டத்தில் தலா 10 கிலோ அரிசி வழங்குவதற்கு மத்திய அரசிடம் கூடுதலாக அரிசி ஒதுக்குமாறு கேட்போம் என்று மந்திரி கே.எச்.முனியப்பா கூறியுள்ளார்.
பெங்களூரு:
காங்கிரஸ் ஆட்சி
அன்ன பாக்கிய திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் (பி.பி.எல்.) உள்ளோருக்கான ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் அதை 10 கிலோவாக அதிகரிப்போம் என்று அக்கட்சி தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. மாநிலத்தில் தற்போது முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது.
இந்த நிலையில் பி.பி.எல். ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசியை தலா 10 கிலோவாக உயர்த்துவது குறித்து உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை மந்திரி கே.எச்.முனியப்பா அதிகாரிகளுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு கே.எச்.முனியப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-
அதிகாரிகளிடம் ஆலோசனை
கர்நாடகத்தில் அன்ன பாக்கிய திட்டத்தின் கீழ் பி.பி.எல். ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 5 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அதை 10 கிலோவாக உயர்த்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். அவ்வாறு அரிசி அளவை உயர்த்தினால் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். இந்த திட்டத்திற்கு தேவையான அரிசியை கூடுதலாக ஒதுக்குமாறு மத்திய அரசிடம் கேட்போம்.
வேறு ஆதாரங்கள் மூலம் நிதியை திரட்டுவது குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டுள்ளேன். இன்று சேகரித்த தகவல்கள் நாளை (இன்று) சித்தராமையா தலைமையில் நடைபெறும் மந்திரிகள் கூட்டத்தில் வழங்கப்படும்.
இவ்வாறு கே.எச்.முனியப்பா கூறினார்.