ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை: சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்த்து போராடுவோம் - ஜெய்ராம் ரமேஷ்
அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுடெல்லி,
கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீனும் வழக்கப்பட்டுள்ளது. ரூ.10,000 பிணையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் ராகுல் காந்தியின் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது. உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் பொருட்டு தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தி எம்.பி. பதவியை இழக்க அதிக வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
50க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் இன்று மல்லிகார்ஜுன் கார்கே வீட்டில் ஒன்று கூடினர். நாளை காலை 10 மணிக்கு அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காலை 11:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை, எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி விஜய் சௌக் வரை நடைபயணம் மேற்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். ஜனாதிபதியிடம் நாளை நேரம் கேட்டுள்ளோம்.
நாளை மாலை காங்கிரஸ் தலைவர் மற்றும் சிஎல்பி தலைவர் சந்திப்பு பல்வேறு மாநிலங்களில் நடைபெற உள்ளது. ராகுல் காந்தி மீதான இந்த தீர்ப்பு பிரதமர் மோடி அரசின் கண்ணியமற்ற அரசியலுக்கு எடுத்துக்காட்டு. இதை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்த்து போராடுவோம் என்றார்.