கிணற்றில் விழுந்த வெல்டிங் தொழிலாளி சாவு
வேலி அமைத்து கொண்டிந்தபோது கிணற்றில் விழுந்த வெல்டிங் தொழிலாளி உயிரிழந்தார்.
டி.ஜே.ஹள்ளி:-
பெங்களூரு டி.ஜே.ஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சிவா(வயது 26). வெல்டிங் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 15 நாட்களான பச்சிளம் குழந்தை உள்ளது. இந்த நிலையில் அவர் அந்த பகுதியில் ஒரு வீட்டில் உள்ள கிணற்றுப்பகுதிக்கு கம்பி வேலி அமைப்பதற்காக சென்றார். அவர் கிணற்றின் மேற்பரப்பில் போடப்பட்டு இருந்த இரும்பு கம்பியில் அமர்ந்து பணி செய்து கொண்டிருந்தார்.
அப்போது பழமையான அந்த கம்பி திடீரென அறுந்து விழுந்தது. அந்த சமயத்தில் கிணற்றில் விழுந்த சிவா, கத்தி கூச்சலிட்டார். ஆனால் அங்கு அவரை காப்பாற்ற யாரும் இல்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே கிணற்றில் விழுந்த வாலிபர் பிடித்து கொள்வதற்கு எதுவும் இல்லாததால், அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டி.ஜே.ஹள்ளி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் கடந்த 2010-ம் ஆண்டில் டி.ஜே.ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கிணற்றுப்பகுதியில் அமர்ந்து வேலை செய்த வாலிபர் விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.