எதிர்க்கட்சியாக இருந்தபோது பா.ஜனதா என்ன செய்தது?- சித்தராமையா கேள்வி


எதிர்க்கட்சியாக இருந்தபோது பா.ஜனதா என்ன செய்தது?-  சித்தராமையா கேள்வி
x

எதிர்க்கட்சியாக இருந்தபோது பா.ஜனதா என்ன செய்தது என்று சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூரு: சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் மந்திரி அஸ்வத் நாராயண், பா.ஜனதா மாநில துணை தலைவர் விஜயேந்திராவுக்கு தொடர்பு இருப்பதாக எதிரக்கட்சி தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு கூறி இருந்தார். முறைகேட்டுக்கு பொறுப்பு ஏற்று போலீஸ் மந்திரி பதவியை அரக ஞானேந்திரா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார். இந்த விவகாரம் பற்றி கருத்து தெரிவித்திருந்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் மந்திரி அரக ஞானேந்திரா, காங்கிரஸ் ஆட்சியின் போதும் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு கூறி இருந்தார்கள். இந்த குற்றச்சாட்டு குறித்து சித்தராமையாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினாா்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது, விசாரணையும் நடந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு கூறுவதால், அதுபற்றியும் சேர்த்து அரசு விசாரணை நடத்தட்டும். அதே நேரத்தில் காங்கிரஸ் ஆட்சியில் முறைகேடு நடந்ததாக கூறும்போது, எதிர்க்கட்சியாக இருந்தது பா.ஜனதா தான். தற்போது குற்றச்சாட்டு கூறும் பா.ஜனதாவினர் எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஏன் குரல் எழுப்பவில்லை. ஒரு போராட்டம் கூட நடத்தவில்லை. எதிர்க்கட்சியாக இருந்த போது பா.ஜனதா என்ன செய்தது?. சாப்பிட்டு கொண்டு இருந்தார்களா?. சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் அரக ஞானேந்திரா உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story