பஜ்ரங்தளத்திற்கும், ஆஞ்சநேயருக்கும் என்ன தொடர்பு?
பஜ்ரங்தளத்திற்கும், ஆஞ்சநேயருக்கும் என்ன தொடர்பு? என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு:-
பிரதமர் மோடி ஆதரவு
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் பஜ்ரங்தளத்தை தடை செய்வதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை முன்வைத்து பிரதமர் மோடி தனது பிரசார கூட்டத்தில், 'பஜ்ரங்கபலி' என்று கோஷமிட்டு அந்த அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.
இந்த விவகாரம் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோர் நேற்று பெங்களூருவில் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
வேலைவாய்ப்புகள்
பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிக்கிறோம் என்று சொன்னவுடன் பா.ஜனதாவினர் அதிர்ச்சி அடைவது ஏன்?. ஆஞ்சநேயருக்கும், பஞ்ரங்தளத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது?. இந்த விஷயத்தில் பா.ஜனதாவினர் மக்களை தூண்டி விடுகிறார்கள். இவை எல்லாம் மக்களுக்கு புரிகிறது. நாங்கள் ஆஞ்சநேய பக்தர்கள். ஆஞ்சநேயர் வேறு, பஜ்ரங்தளம் வேறு. பஜ்ரங்கி என்று கூறி பிரசாரம் செய்ய பா.ஜனதா தலைவர்கள் மக்களின் வயிற்றை நிரப்ப என்ன செய்தனர்?. எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தனர். இந்த விவகாரத்தால் தேர்தலில் காங்கிரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது உறுதி. நானும் இந்து தான். நான் ஆஞ்சநேயர், ராமர், சிவ பக்தர்.
அனுமதி வழங்குகிறார்கள்
பெங்களூருவில் பிரதமர் மோடி ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்குகிறார்கள். போலீசாா் பா.ஜனதாவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். நாங்களும் பெங்களூருவில் ஊர்வலம் நடத்துவோம். வருகிற 7-ந் தேதி ராகுல் காந்தி பெங்களூருவில் ஊர்வலம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு எடுப்போம்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.