சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்துக்கு காரணம் என்ன? முதற்கட்ட விசாரணையில் தகவல்
டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி, கார் விபத்துக்கான காரணம் குறித்து முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் சைரஸ் மிஸ்த்ரி. இவர் அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு தனது மெர்சிடிஸ் பென்ஸ் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் சூர்யா ஆற்றின் மேல் செல்லும் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது சாலையில் இருந்த டிவைடரில் கார் எதிர்பாராதவிதமாக திடீரென மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் இருந்த 4 பேரில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 2 பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி, கார் விபத்தில் உயிரிழந்தது குறித்து விரிவான விசாரணைக்கு மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார்.
இந்தநிலையில், டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி பயணித்த கார், அதிவேகமாக ஓட்டி சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நடந்துள்ளதாகவும், காரில் பயணித்த யாரும் 'சீட்-பெல்ட்' அணியவில்லை என்பதும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிவந்துள்ளது.