ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் கைலாசா நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்பு


ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் கைலாசா நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்பு
x

ஜெனீவாவில் நடந்த ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் நித்யானந்தா சாமியாரின் பெண் ஆதரவாளர்கள் கைலாசா நாட்டு பிரதிநிதிகளாக பங்கேற்றனர்.

நித்யானந்தா சாமியார்

தமிழ்நாடு திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்தவர் நித்யானந்தா சாமியார். இவருக்கு சொந்தமான ஆசிரமம் பெங்களூரு அருகே ராமநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பிடதியில் உள்ளது. இந்த நிலையில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நித்யானந்தா சாமியார் மீது பாலியல் வழக்கு உள்பட ஏராளமான வழக்குகள் உள்ளன. தற்போது குஜராத்தில் உள்ள நித்யானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமத்தில் நடந்த பாலியல் வழக்கு தொடர்பாக அவரை அம்மாநில போலீசார் தேடிவருகிறார்கள்.

இந்த நிலையில் நித்யானந்தா சாமியார் திடீரென தலைமறைவானார். பின்னர் அவர் தன்னைத்தானே கடவுள் என்று கூறிக்கொண்டு அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு வந்தார்.

கைலாசா நாடு

மேலும் கைலாசா நாட்டை உருவாக்கி இருப்பதாகவும், இதற்காக உரிய அனுமதியை தான் பெற்றிருப்பதாகவும், ஆன்மிகத்தை விரும்புவோர் கைலாசா நாட்டுக்கு வரலாம் என்றும் வீடியோவை வெளியிட்டு நித்யானந்தா சாமியார் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் சமீபத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரத்தில் ஐ.நா. சபை பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பொருளாதாரம், சமூகம், கலாசார உரிமைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டன.

பெண் ஆதரவாளர்கள்

அந்த கூட்டத்தில் கைலாசா நாட்டின் சார்பில் நித்யானந்தா சாமியாரின் பெண் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். அவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, சுலோவேனியா, பிரான்ஸ் உள்பட பல்வேறு நாடுகளில் நித்யானந்தா சாமியாருக்கு சொந்தமான ஆசிரமங்களை நிர்வகித்து வருபவர்கள் ஆவார்கள்.

அவர்களில் குறிப்பிடும்படியாக சொல்லக்கூடியவர் விஜயப்பிரியா என்பவர் ஆவார். அவர் அமெரிக்காவில் நித்யானந்தா சாமியாரின் ஆசிரமங்களை நிர்வகித்து வருகிறார். அவருடைய புகைப்படத்தைத் தான் முகப்பு படமாக வைத்து நித்யானந்தா சாமியார் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.


Next Story