போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு மறுதேர்வு எப்போது?


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு மறுதேர்வு எப்போது?
x
தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 9:24 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு மறுதேர்வு எப்போது நடத்தப்படும் என்பதற்கு போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் பதில் அளித்துள்ளார்.

பெங்களூரு:-

தேர்வு முறைகேடு

கர்நாடகத்தில் 545 பணிகளுக்கு சப்-இன்ஸ்பெக்டர்களை தேர்வு செய்ய கடந்த ஆண்டு(2021) தேர்வு நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியானது. அப்போது தேர்வில் ஏராளமானோர் 400-க்கும் மேற்பட்டோர் முறைகேடு செய்து வெற்றி பெற்றது தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்து வரும் சி.ஐ.டி. போலீசார் ஆள்சேர்ப்பு பிரிவு முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பால் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து உள்ளனர்.

தேர்வில் முறைகேடு நடந்து இருப்பதால் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா அறிவித்தார். ஆனால் நியாயமான முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் மறுதேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அரசின் இந்த முடிவுக்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

ஐகோர்ட்டு உத்தரவுக்கு....

அந்த மனு மீதான விசாரணை அவ்வப்போது கர்நாடக ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் தனது டுவிட்டர் பக்கத்தில், 'கர்நாடக மாநில ஆயுதப்படை போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு ஜனவரி 8-ந் தேதி தேர்வு நடைபெறுகிறது.

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு மறுதேர்வு நடத்துவது குறித்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணையில் உள்ளது. ஐகோர்ட்டின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறியுள்ளார்.


Next Story