கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் எப்போது?


கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் எப்போது?
x

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் எப்போது? என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது


பெங்களூரு: கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் எப்போது நடைபெறும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

மந்திரிசபை விரிவாக்கம்

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான மந்திரிசபையில் தற்போது 5 இடங்கள் காலியாக உள்ளன. மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு பா.ஜனதா மேலிடத்திடம் பசவராஜ் பொம்மை கோரிக்கை விடுத்துள்ளார். 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் மந்திரிசபை விரிவாக்கத்திற்கு பா.ஜனதா மேலிடம் அனுமதி வழங்கவில்லை. இதனால் மந்திரி பதவியை எதிர்நோக்கியுள்ள அக்கட்சியின் மூத்த எம்.எல்.ஏ.க்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.

சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் மந்திரிசபை விரிவாக்கத்தை மேலும் தாமதப்படுத்தினால் சரியாக இருக்காது என்று பா.ஜனதா நிர்வாகிகள் கூறுகிறார்கள். மந்திரிசபை விரிவாக்கத்தை மேற்கொண்டால் பதவி கிடைக்காதவர்கள் போர்க்கொடி தூக்குவார்கள். இதனால் கட்சிக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று பா.ஜனதா மேலிடம் கருதுகிறது.

ஈசுவரப்பா-ரமேஷ் ஜார்கிகோளி

இந்த நிலையில் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய விரைவில் பா.ஜனதா மேலிடம் அனுமதி வழங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு மந்திரிசபையை விரிவாக்கம் செய்தால் 4 இடங்களை மட்டும் நிரப்பிவிட்டு ஒரு இடத்தை காலியாக வைக்க பசவராஜ் பொம்மை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஊழல் புகாரில் பதவி இழந்த ஈசுவரப்பா, பாலியல் புகாரில் மந்திரி பதவியை ராஜினாமா செய்த ரமேஷ் ஜார்கிகோளி ஆகியோருக்கு மீண்டும் மந்திரிசபையில் இடம் வழங்குவது குறித்து பா.ஜனதா மேலிடம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.

மேலும் முன்னாள் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி, மீண்டும் தனக்கு ஒரு வாய்ப்பு வழங்குமாறு கேட்டு வருகிறார். அவருக்கு வாய்ப்பு வழங்க பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போல் கர்நாடக பா.ஜனதாவுக்கு புதிய தலைவரை நியமிக்கவும் பா.ஜனதா மேலிடம் ஆலோசித்து வருகிறது. இந்த பதவிக்கு மத்திய மந்திரி ஷோபா, மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார், தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.


Next Story