தொழிலாளியை கொன்று நாடகமாடியவர் கைது
மனைவி குறித்து தவறாக பேசியதால் தொழிலாளியை கொன்றுவிட்டு நாகடகமாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு:-
பெங்களூரு ஜெயநகர் பகுதியில் வசித்து வந்தவர் மணிகண்டா, தொழிலாளி. கடந்த 8-ந் தேதி இவர், ஜெயநகர் 1-வது பிளாக் பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார். இதுபற்றி மணிகண்டாவின் குடும்பத்தினருக்கு, அதே பகுதியில் வசிக்கும் சுரேஷ், அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர். அப்போது குடிபோதையில் கீழே விழுந்ததில் மணிகண்டாவின் தலையில் காயம் ஏற்பட்டு இருப்பதாக சுரேஷ் கூறி இருந்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மணிகண்டா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால் மணிகண்டா குடிபோதையில் கீழே விழுந்து பலியாக வாய்ப்பில்லை, சுரேஷ் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் மணிகண்டாவின் குடும்பத்திற்கு உண்டானது. இதுபற்றி சித்தாபுரா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
மேலும் சுரேசை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது மணிகண்டாவை கொலை செய்ததை சுரேஷ் ஒப்புக் கொண்டார். அதாவது குடிபோதையில் சுரேஷ் வீட்டுக்கு சென்ற மணிகண்டா, சுரேசின் மனைவி குறித்து தவறாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், கம்பியால் தாக்கி மணிகணடாவை கொலை செய்துவிட்டு, குடிபோதையில் கீழே விழுந்து தலையில் காயம் அடைந்ததாக நாடகமாடியது தெரியவந்துள்ளது.