பாலியல் தொல்லை விவகாரம்-மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்துக்கு பிரியங்கா ஆதரவு
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண்சிங்குக்கு எதிராக அளித்த பாலியல் தொல்லை புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி,
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண்சிங்குக்கு எதிராக அளித்த பாலியல் தொல்லை புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, மல்யுத்த வீராங்கனைகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக மல்யுத்த வீரர்களும் களத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில், அந்த போராட்டத்துக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மல்யுத்த வீராங்கனைகள், நாடாளுமன்றம் அருகே கண்ணீருடன் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களின் குரலை யாரும் கண்டுகொள்ளவில்லை.
அவர்களது புகார் மீது விசாரணை நடக்கும் என்று மத்திய அரசு கூறியது. ஆனால், விசாரணை நடக்கவில்லை. அதனால், தண்டனை பற்றிய கேள்வியே எழவில்லை. குற்றவாளியை பாதுகாக்க மத்திய அரசு விரும்புகிறதா? டெல்லி போலீசுக்கு அழுத்தம் கொடுப்பது யார்? ஒரு கட்சியின் ஆணவம், விண்ணளவுக்கு உயர்வாக இருக்கும்போது, இதுபோன்ற குரல்கள் நசுக்கப்படுகின்றன. நமது சகோதரிகளுக்கு ஆதரவு கொடுப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.