2-வது மனைவி மீது பொய் புகார் அளித்தது ஏன்?


2-வது மனைவி மீது பொய் புகார் அளித்தது ஏன்?
x

பெங்களூருவில் இன்ஸ்பெக்டரின் உதவியுடன் 2-வது மனைவி மீது பொய் புகார் அளித்தது ஏன்? என்பது குறித்து சான்ட்ரோ ரவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

பெங்களூரு:-

மனைவி மீது பொய் புகார்

மைசூருவை சேர்ந்த விபசார கும்பல் தலைவன் சான்ட்ரோ ரவி. இவர், விபசார தொழில் செய்து வந்ததுடன், அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்டு போலீசாரின் பணி இடமாற்றத்திலும் ஈடுபட்டு வந்தார். குஜராத் மாநிலத்தில் தலைமறைவாக இருந்த சான்ட்ரோ ரவியை மைசூரு போலீசார் கைது செய்திருந்தனர். அவர் மீதான வழக்குகள் சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, சான்ட்ரோ ரவியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், பெங்களூரு காட்டன் பேட்டை போலீஸ் நிலையத்தில் தனது 2-வது மனைவி மீதும், அவரது சகோதரி மீதும் சான்ட்ரோ ரவி புகார் அளித்திருந்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பிரவீன் வழக்குப்பதிவு செய்து சான்ட்ரோ ரவியின் 2-வது மனைவியை கைது செய்திருந்தார். பொய் புகார் பதிவு செய்ததாக இன்ஸ்பெக்டர் பிரவீன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மடிக்கணினி திருட்டு

இந்த நிலையில், சி.ஐ.டி. போலீஸ் வசம் இருக்கும் சான்ட்ரோ ரவியிடம், 2-வது மனைவி மீதும், அவரது சகோதரி மீதும் பொய் புகார் அளித்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது போலீசாரிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதாவது சான்ட்ரோ ரவி தனது சொந்த விவகாரங்கள், தகவல்களை சேகரித்து வைத்திருந்த மடிக்கணினியை வீட்டில் வைத்திருந்தார். அந்த மடிக்கணினி காணாமல் போய் இருக்கிறது. அந்த மடிக்கணினியை 2-வது மனைவி எடுத்து வைத்திருப்பது பற்றி சான்ட்ரோ ரவிக்கு தெரியவந்துள்ளது.

இதுபற்றி கேட்ட போது தனக்கு எதுவும் தெரியாது என்று மனைவி கூறியுள்ளார். இதையடுத்து, அந்த மடிக்கணினியை பெறுவதற்காக காட்டன் பேட்டை இன்ஸ்பெக்டர் பிரவீன் உதவியை சான்ட்ரோ ரவி நாடி இருக்கிறார். பின்னர் தன்னுடைய 2-வது மனைவி மற்றும் அவரது சகோதரி மீது காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில் நகை, பணத்தை கொள்ளையடித்ததாக பொய் புகார் அளித்திருந்தார்.

இன்ஸ்பெக்டர் கைதாக வாய்ப்பு

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரவீனும் வழக்குப்பதிவு செய்து சான்ட்ரோ ரவியின் மனைவி, அவரது சகோதரியை கைது செய்து சிறையில் அடைத்திருந்தார். மேலும் மைசூருவில் இருந்து கடந்த ஆண்டு (2022) நவம்பர் மாதம் 23-ந் தேதி சான்ட்ரோ ரவியின் மனைவி பெங்களூருவுக்கு வந்திருப்பதை சான்ட்ரோ ரவி மூலமாக உறுதி செய்துவிட்டு, மனைவி மற்றும் சகோதரியை கைது செய்திருந்ததாகவும் போலீசாரிடம் சான்ட்ரோ ரவி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மனைவி மீது பொய் புகார் அளித்த விவகாரத்தில் சான்ட்ரோ ரவி தவறை ஒப்புக்கொண்டு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருப்பதால், இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் பிரவீனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அவரை விசாரணைக்கு ஆஜராக போலீசார் உத்தரவிட்டுள்ளனர். சான்ட்ரோ ரவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ரவி கைதாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

மடிக்கணினியில் இருப்பது என்ன?

இதற்கிடையில், இன்ஸ்பெக்டர் பிரவீன், சான்ட்ரோ ரவியின் 2-வது மனைவியை பொய் கொள்ளை வழக்கில் கைது செய்து விசாரித்திருந்த போது அந்த மடிக்கணினியை தான் எடுக்கவில்லை என்று உறுதியாக கூறி இருந்ததும் தெரியவந்துள்ளது. இதனால் சான்ட்ரோ ரவியின் தகவல்கள் அடங்கிய மடிக்கணினி எங்கே சென்றது?, தற்போது அது யாரிடம் உள்ளது? என்பது குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். அந்த மடிக்கணினியில் விபசாரம், போலீசாரின் பணி இடமாற்றம், பிற முக்கிய வீடியோக்கள் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து, சான்ட்ரோ ரவிக்கு சொந்தமான மடிக்கணினியை

கண்டுபிடிக்கவும் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.


Next Story