'அக்னிபத்' திட்ட பிரச்சினையில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? தேஜஸ்வி யாதவ் கேள்வி
புதுடெல்லி,
அக்னிபத் திட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி டெல்லியில் நேற்று சத்தியாகிரக போராட்டம் நடத்தியது.
இதற்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்த விவகாரத்தில் வெறும் அரசியல் மட்டுமே உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், 'காங்கிரஸ் சத்தியாகிரகத்தில் பேசிய பிரியங்கா, இந்த அரசை கவிழ்க்க வேண்டும் என கூறியுள்ளார். இதன் மூலம் அவர்களுக்கு படைகள் மீதோ, இளைஞர்கள் மீதோ எந்த கவலையும் இல்லை என்பது தெளிவாகிறது. இது சோகமானது' என்று தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு போன்ற முக்கியமான விவகாரங்களில் அரசியல் கூடாது என தெரிவித்த பத்ரா, ஆனால் இங்கு அரசியல் நடப்பதாக குற்றம் சாட்டினார்.
அக்னிபத் திட்டம் மிகவும் தேவையான சீர்திருத்தம் எனக்கூறிய அவர், இது இந்திய ஆயுத படைகளுக்கு இளமைத் தன்மையை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.