மல்லிகார்ஜூன கார்கேவுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்பட்டது ஏன்?- அரசியல் வல்லுனர்கள் கருத்து


மல்லிகார்ஜூன கார்கேவுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்பட்டது ஏன்?- அரசியல் வல்லுனர்கள் கருத்து
x

மல்லிகார்ஜூன கார்கேவுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்பட்டது ஏன்? என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு: மல்லிகார்ஜூன கார்கேவுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்பட்டது ஏன் என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

கார்கே வெற்றி

இந்தியாவின் பழம்பெரும் காட்சியான காங்கிரசுக்கு தலைவரை தேர்ந்து எடுக்க சமீபத்தில் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் கர்நாடகத்தை சேர்ந்த பழுத்த அரசியல்வாதியான மல்லிகார்ஜூன கார்கேயையும், முன்னாள் மத்திய மந்திரியான கேரளாவை சேர்ந்த சசிதரூம் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே அபார வெற்றி பெற்று பராம்பரியமிக்க காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் மல்லிகார்ஜூன கார்கே தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டதன் பின்னணியில் பல தகவல்கள் உள்ளன. அதுபற்றிய விவரம் வருமாறு:-

மல்லிகார்ஜூன கார்கே வடகர்நாடகத்தை சேர்ந்தவர். தலித் சமூகத்தை சேர்ந்த அவர் கர்நாடக மந்திரி, மத்திய மந்திரி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து உள்ளார்.

கைநழுவி போன வாய்ப்பு

மல்லிகார்ஜூன கார்கேவுக்கு சில முறை கர்நாடக முதல்-மந்திரி ஆகும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு கை நழுவி போனது. ஆனாலும் அவர் கட்சி மேலிடத்திற்கு விசுவாசமாக இருந்தார். சோனியா, ராகுலின் தீவிர விசுவாசி என்று மல்லிகார்ஜூன கார்கே நம்பப்படுகிறார். தேர்தல் மூலம் மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்பட்டாலும் அவருக்கு மறைமுகமாக ராகுல், சோனியாவின் நேரடி ஆதரவு இருந்தது என்பதே உண்மை.

இந்த நிலையில் கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல்-மே மாதங்களில் நடக்க உள்ள கர்நாடக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டே மல்லிகார்ஜூன கார்கேவுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது கடந்த 2013 முதல் 2018 வரை கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அப்போது முதல்-மந்திரியாக இருந்த சித்தராமையா தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக பல திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

தலித் மக்கள் வாக்குகள்

மேலும் அவர் அரசின் மீது பெரிய அளவில் ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. இதனால் 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறும் நிலை இருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக காங்கிரஸ் தோல்வி அடைந்தது. தற்போது பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி தங்கள் சமூகத்திற்கு பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை என்று தலித் மக்கள் மனதில் நினைத்து கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே சமீபத்தில் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு கர்நாடக பா.ஜனதா அரசு கூடுதல் இடஒதுக்கீடு அதிகரித்து உள்ளது. இதனால் அந்த சமுதாய மக்களின் ஓட்டுகள் பா.ஜனதாவுக்கு விழும் நிலை உள்ளது. இதனை தடுக்கவே மல்லிகார்ஜூன கார்கேவுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்பட்டு உள்ளதாக அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

கர்நாடக காங்கிரசுக்கு சாதகம்

இதுகுறித்து அரசியல் வல்லுனரான நாராயணா கூறும்போது:-

மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தலைவர் பதவி கொடுக்கப்பட்டது கர்நாடக காங்கிரசுக்கு சாதகமாக உள்ளது. காங்கிரஸ் கட்சியில் தங்களுக்கு உரிய உரிமைகள் கிடைப்பது இல்லை என்பது தலித் சமூகத்தினர் மனதில் ஒரு அதிருப்தியாக உள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து தலித் ஒருவர் முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டால் மட்டுமே அந்த அருப்தியை சரிசெய்ய முடியும். சித்தராமையாவை நம்பி ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இருந்து காங்கிரசுக்கு வந்தவர்களுக்கு வருகிற தேர்தலில் டிக்கெட் கொடுக்கப்படுமா? என்ற விவாதமும் கட்சியில் உள்ளது. கர்நாடகத்தில் இன்னொரு அதிகார மையம் அமையும். சட்டசபை தேர்தலை மனதில் வைத்தே கார்கேவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகரும், அரசியல் வல்லுனருமான வி.ஆர்.சுதர்சன் கூறும்போது, மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி கிடைத்து இருப்பது கர்நாடகத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயம். அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருப்பது அரசியல்ரீதியாகவும், சமூக ரீதியாகவும் கட்சியை வலுப்படுத்தும். அவர் கட்சிக்கு ஆதரவாக தலித்துகளை ஒருங்கிணைக்க ஒரு வாய்ப்பு கிடைத்து உள்ளது என்றார்.Why was Mallikarjuna Kharge given the post of Congress president?


Next Story