முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்கியது ஏன்?
எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியை விட்டு நீக்கியது ஏன்? என்று பா.ஜனதாவுக்கு சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
கலபுரகி:-
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலபுரகியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
எனக்கு மகிழ்ச்சி
எனது பஸ் பஞ்சராகிவிட்டதாக எடியூரப்பா சொல்கிறார். அவரை பா.ஜனதா மேலிடம் ஏற்கனவே பஞ்சராக்கிவிட்டது. முதல்-மந்திரி பதவியை விட்டு நீக்கியதே அவரை பஞ்சராக்கியதற்கு சமம். அவர் மீது எனக்கு அனுதாபம் உள்ளது. அவர் உடல் ஆரோக்கியமாக உள்ளார் என்பது எனக்கு மகிழ்ச்சி. பா.ஜனதாவை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று அக்கட்சியினர் முயற்சி செய்கிறார்கள். அதை அவர்கள் செய்யட்டும். ஆனால் எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியை விட்டு நீக்கியது ஏன்?. இதற்கு பா.ஜனதாவினர் பதிலளிக்க வேண்டும்.
மீண்டும் அவர் முதல்-மந்திரி ஆவாரா?. அவரை பார்த்து மக்கள் வாக்களிப்பார்களா?. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எடியூரப்பா பிரசாரம் செய்தபோது, தான் முதல்-மந்திரியாவதாக கூறி வாக்கு கேட்டார். அவ்வாறு இருந்தும் பா.ஜனதா 104 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இப்போது அவர் முதல்-மந்திரி ஆக மாட்டார். இந்த சூழ்நிலையில் பா.ஜனதாவுக்கு வாக்களிப்பார்களா?.
ஊழல்-முறைகேடுகள்
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது உறுதி.முதல்-மந்திரி யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும். பா.ஜனதாவுக்கு எதிராக ஆளுங்கட்சி எதிர்ப்பு அலை உள்ளது. 40 சதவீத கமிஷன், ஊழல், முறைகேடுகள் என மோசமான நிர்வாகத்தால் மக்கள் வெறுப்பில் உள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்த சூழ்நிலையில் பா.ஜனதாவுக்கு மக்கள் வாக்களிப்பார்களா?.
நான் தோல்வி பயத்தால் தொகுதியை தேடவில்லை. பெங்களூருவுக்கு அருகில் தொகுதி இருக்க வேண்டும் என்று நினைத்து தொகுதியை தேடினேன். கோலாாில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளேன். கர்நாடகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பா.ஜனதா ஆட்சியில் ஏழைகளுக்கு ஒரு வீடு கூட கட்டி கொடுக்கவில்லை. நான் கோலாரில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன்.
ஐகோர்ட்டு தடை
பஞ்சமசாலி சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கவில்லை. இந்த விஷயத்தில் அரசு எடுத்த முடிவுக்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. தலித், பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீட்டை 24 சதவீதமாக அதிகரித்தனர். இதற்கு அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்தனரா?. இது தான் இரட்டை என்ஜின் அரசின் சாதனையா?.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.