காட்டுயானை கும்கி உதவியுடன் பிடிப்பு
குடகு அருகே கரடிகோட்டில் தொடர் அட்டகாசம் செய்து வந்த காட்டுயானையை வனத்துறை அதிகாரிகள் கும்கிகள் உதவியுடன் பிடித்து துபாரே முகாமிற்கு அனுப்பி வைத்தனர்.
குடகு:-
காட்டுயானைகள் அட்டகாசம்
குடகு மாவட்டத்தில் உள்ள சித்தாபுரா, கரடிகோடு, இஞ்சிலகெரே, குய்யா, மால்தாரே, படகா பங்கல் ஆகிய காபி தோட்டங்களில் காட்டுயானைகள் அட்டகாசம் செய்து வந்தது. இதனால் ஏராளமான ஏக்கர் நெல் பயிர்கள், காபி செடிகள், வாழை பயிர்கள் நாசமானது. மேலும் சில கூலி தொழிலாளிகளும் காட்டுயானை தாக்கி இறந்துள்ளனர். இந்த காட்டுயானைகளை பிடிக்கும்படி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தை ஏற்ற வனத்துறை அதிகாரிகள் காட்டுயானைகள் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தனர். மாநில அரசும் தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்த 3 காட்டுயானைகளை பிடிக்கும்படி உத்தரவிட்டது. கடந்த கடந்த 3 நாட்களுக்கு முன்பு வனத்துறை அதிகாரிகள் காட்டுயானைகளை பிடிக்கும் முயற்சியை தொடங்கினர்.
கும்கிகள் வரவழைப்பு
இதற்காக துபாரே, மத்திகோடு முகாம்களில் இருந்து அபிமன்யு, தனஞ்ஜெய், பீமா, பிரசாந்த், பீஷ்ம ஆகிய 5 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. இந்த கும்கியானைகள் கொண்டு காட்டுயானைகளை வனத்துறை அதிகாரிகள் தேடி வந்தனர்.
இதற்காக 50-க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள் முகாமிட்டிருந்தனர். மேலும் இரவு பகலாக காட்டுயானைகள் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கரடிகோடு பகுதியில்
22 வயது ஆண் யானை சுற்றி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் கும்கிகள் உதவியுடன் அதை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் அவை மிரண்டு ஓடியது. இதையடுத்து யானையை நோக்கி மயக்க ஊசி செலுத்தினர். இதில் மதம் பிடித்த யானை சிறிது தூரம் ஓடி சென்று மயங்கி விழுந்தது. பின்னர் கயிறு கட்டி கும்கிகள் உதவியுடன் வனத்துறையினர் அதை மீட்டனர். துபாரே யானைகள் முகாமிற்கு அந்த காட்டுயானை அனுப்பி வைக்கப்பட்டது.