காட்டுயானைகள் விளை நிலத்திற்குள் புகுந்து அட்டகாசம்


காட்டுயானைகள் விளை நிலத்திற்குள் புகுந்து அட்டகாசம்
x
தினத்தந்தி 20 March 2023 10:00 AM IST (Updated: 20 March 2023 10:01 AM IST)
t-max-icont-min-icon

மூடிகெரேயில் விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டுயானைகள் அட்டகாசம் செய்ததில் தென்னை, வாழை மரங்கள் நாசமாகின.

சிக்கமகளூரு-

மூடிகெரேயில் விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டுயானைகள் அட்டகாசம் செய்ததில் தென்னை, வாழை மரங்கள் நாசமாகின.

காட்டுயானைகள் அட்டகாசம்

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகாவில் கடந்த சில வாரங்களாக காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக இந்த காட்டுயானைகள் ஒலே குடிகே, பிதரஹள்ளி, பாளூரு, சார்கோடு உள்பட பல்வேறு கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

இது குறித்து கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்து, காட்டுயானைகள் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இருப்பினும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் கிராம மக்கள் தோட்டங்களுக்கு மற்றும் வனப்பகுதிகளுக்கு கூலி வேலைகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் கிராமத்திற்குள்ளேயே தனியாக நடந்து செல்ல முடியாத அளவு காட்டுயானைகள் அச்சுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

பயிர்கள் நாசம்

இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் காட்டுயானைகள் தோட்டத்திற்குள் புகுந்து அச்சுறுத்தியுள்ளது. மூடிகெரே தாலுகா ஒலேகுடிகே கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானைகள் கூட்டம், அதே கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணப்பா என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்தது. பின்னர் அந்த யானைகள் அங்கிருந்த பாக்கு, தென்னை, வாழை மரங்கள் மற்றும் காபி செடிகளை வேருடன் பிடுங்கி எரிந்துவிட்டு சென்றது.

நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற உரிமையாளர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து மூடிகெரே வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள், விசாரணை நடத்தினர். அப்போது கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, வனத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

நடவடிக்கை எடுக்கவேண்டும்

அப்போது அவர்கள் விளை நிலத்திற்குள் காட்டுயானைகள் புகுந்து பயிர்களை நாசப்படுத்துகிறது. இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுவரை அரசு சார்பில் எந்த நஷ்டஈடும் வழங்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து காட்டுயானைகள் எங்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் எங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே வனத்துறையினர் இந்த காட்டுயானைகள் நடமாட்டத்திற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தனர். இதை கேட்ட வனத்துறை அதிகாரிகள் காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story