விளை நிலத்திற்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்
மூடிகெரே அருகே விளை நிலத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டுயானைகளை வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
சிக்கமகளூரு:-
காட்டுயானைகள் அட்டகாசம்
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா குத்திகேனஹள்ளி மற்றும் ஹெப்பாலே கிராமங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து கிராமத்திற்குள் வரும் காட்டுயானைகள், சிறுத்தைகள், புலிகள், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுகிறது. மேலும் விளை நிலங்களுக்கு புகுந்து விளை பயிர்களை நாசப்படுத்திவிட்டு செல்கின்றனர்.
இந்த வன விலங்குகள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். வனத்துறை அதிகாரிகள் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
இந்நிலையில் மீண்டும் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் குத்திகேனஹள்ளி, ஹெப்பாலே கிராமங்களுக்கு புகுந்த 6 காட்டுயானைகள், விளை நிலங்களுக்குள் புகுந்தது. மேலும் அந்த காட்டுயானைகள், விளை நிலத்தில் இருந்த காபி, மிளகு, பாக்கு, செடிகளை பிடுங்கி எறிந்து சேதப்படுத்தின.
வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு
இதை பார்த்த பொதுமக்கள் காட்டுயானையை துரத்த முயற்சித்தனர். ஆனால் அந்த யானைகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பீதியடைந்த கிராம மக்கள் வீடுகளிலேயே அடைந்து கிடக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் இது குறித்து மூடிகெரே வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் பட்டாசுகளை வெடித்து காட்டுயானைகளை துரத்தினர்.
இதையடுத்து அந்த காட்டுயானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இந்நிலையில் வனத்துறையினரை முற்றுகையிட்டு கிராம மக்கள் காட்டுயானைகள் நடமாட்டத்தை முழுமையாக தடுக்கவேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினர். இதை கேட்டு வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து ெசன்றனர்.