என் வாழ்நாளில் இனிமேல் பா.ஜனதாவுடன் கைகோர்க்க மாட்டேன்; நிதிஷ்குமார்
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் நிதிஷ் குமார் வெளியேறி இருந்தார்.
பாட்னா,
பீகார் மாநிலம் சமஷ்டிபூரில், அரசு என்ஜினீயரிங் கல்லூரியின் புதிய கட்டிடத்தை அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
வாஜ்பாய், அத்வானி, ஜோஷி போன்ற மாபெரும் தலைவர்களின் காலத்து பா.ஜனதாவில் இருந்து தற்போதைய பா.ஜனதா வேறுபட்டது. அந்த தலைவர்கள் என் மீது பாசமும், மரியாதையும் வைத்திருந்தனர். தற்போதைய தலைவர்களிடம் அதை பார்க்க முடியவில்லை. மேலும், சாமானியர்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை.
நான் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி விட்டேன். என் வாழ்நாளில் இனிமேல் அக்கட்சியுடன் கைகோர்க்க மாட்டேன். மீதி வாழ்நாளில், சோஷலிஸ்டு கட்சிகளுடன் சேர்ந்து அனைத்துதரப்பினரின் முன்னேற்றத்துக்காக பாடுபடுவேன்.
என்னுடன் கூட்டணியில் இருந்தபோது, 2017-ம் ஆண்டு லாலுபிரசாத் யாதவ் வீட்டில் சோதனை நடந்தது. ஒன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் மீண்டும் என்னுடன் கைகோர்த்தவுடன், அரசியல் எஜமானர்கள் உத்தரவுப்படி, அவர் மீது சி.பி.ஐ. புதிய வழக்கு போட்டு துன்புறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.