ஆனேக்கல் தொகுதியில் 'ஹாட்ரிக்' வெற்றியை ருசிப்பாரா சிவண்ணா?


ஆனேக்கல் தொகுதியில் ஹாட்ரிக் வெற்றியை ருசிப்பாரா சிவண்ணா?
x

கர்நாடகத்தில் உள்ள பழைய சட்டசபை தொகுதிகளில் ஒன்று ஆனேக்கல் தொகுதி ஆகும். கர்நாடக மாநிலம் முன்பு மைசூரு மாநிலமாக இருந்தது. அப்போது இருந்து, அதாவது 1951-ம் ஆண்டு முதல் இந்த தொகுதி தேர்தலை சந்தித்து வருகிறது. 1951-ம் ஆண்டு மைசூரு மாநிலத்தின் கீழ் ஒசக்கோட்டைஆனேக்கல் தொகுதியாக இத்தொகுதி இருந்தது. அப்போது இந்த தொகுதி இரட்டை உறுப்பினர் தொகுதியாக இருந்தது. அந்த 2 இடங்களையும் காங்கிரஸ் கைப்பற்றி இருந்தது. அதில் முதலாமவர் லட்சுமிதேவி ராமண்ணா என்பவர் ஆகும். 2-ம் நபர் எச்.டி.புட்டப்பா என்பவர் ஆவார்.

அதையடுத்து 1957-ம் ஆண்டு முதல் இத்தொகுதி ஆனேக்கல் தொகுதியாக உருவாக்கப்பட்டு தேர்தலை சந்தித்து வருகிறது. 1957 முதல் 1972-ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராமசாமி ரெட்டி, பிரசாத், முனீஸ்வாமய்யா, ராமசாமி ஆகியோர் இத்தொகுதியில் எம்.எல். ஏ.க்களாக இருந்தனர். பின்னர் ராமகிருஷ்ணா என்பவர் 1978-ம் ஆண்டு ஜனதா கட்சி சார்பிலும், 1983-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பிலும் இத்தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்தார். அதையடுத்து 1985 மற்றும் 1989-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளர் கேசவமூர்த்தி வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

அதன்பின்னர் 1994-ம் ஆண்டு ராமகிருஷ்ணா பா.ஜனதாவில் சேர்ந்து இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன்பின்னர் 1998 முதல் 2008-ம் ஆண்டு வரை நடந்த 4 தேர்தல்களிலும் பா.ஜனதாவைச் சேர்ந்த ஏ.நாராயணசாமி வெற்றிபெற்று இருந்தார். 2008-ம் ஆண்டு வெற்றிபெற்றதன் மூலம் பா.ஜனதாவில் அசைக்க முடியாத தலைவராக வலம் வந்த ஏ.நாராயணசாமிக்கு அப்போது மந்திரி பதவியும் வழங்கப்பட்டது. அவர் சமூக நலத்துறை மந்திரியாக இருந்தார்.

அதையடுத்து கடந்த 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் பா.ஜனதா சார்பில் ஏ.நாராயணசாமியே போட்டியிட்டார். ஆனால் ஏ.நாராயணசாமியிடம் இருந்து காங்கிரஸ் வேட்பாளர் சிவண்ணா வெற்றிக்கனியை தட்டிப் பறித்தார். 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் சிவண்ணாவே காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்றார். நடைபெற இருக்கும் தேர்தலிலும் காங்கிரஸ் சார்பில் சிவண்ணாவே களம் காண்கிறார். அவரை எதிர்த்து இந்த முறை பா.ஜனதா சார்பில் ஹுல்லள்ளி சீனிவாஸ் போட்டியிடுகிறார். இவர் புதுமுகம் ஆவார். இதுபோல் ஜனதா தளம்(எஸ்) கட்சி

சார்பில் கே.பி.ராஜு, ஆம் ஆத்மி கட்சி சார்பில் முனேஷ் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள். இத்தொகுதியில் கடந்த 1983-ம் ஆண்டு முதல் பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த தொகுதி பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தொகுதியில் தலித் மக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் தான் இத்தொகுதியில் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவர்களாக கருதப்படுகிறார்கள்.

இந்த தொகுதி பெங்களூரு மாநகருக்கு அருகிலேயே இருந்தாலும் ஏனைய பிரச்சினைகள் இங்கு உள்ளன. குறிப்பாக குடிநீர் பிரச்சினை இத்தொகுதியில் பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. சாக்கடை கால்வாய் பிரச்சினை, பல்லாங்குழியான சாலை மற்றும் பல பகுதிகளுக்கும் இன்னும் தார் சாலை அமைக்கப்படாதது என பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றை சரிசெய்து கொடுக்க இத்தொகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் யாரும் இதுவரையில் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இது காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இதை சாதகமாக பயன்படுத்தி வாக்குகளை அறுவடை செய்ய பா.ஜனதா உள்ளிட்ட மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

தங்களுக்கு எம்.எல்.ஏ.வாக வரப்போகும் நபர் தங்களுடைய பிரச்சினைகளை முன்னின்று தீர்த்து வைக்க வேண்டும் என்று இத்தொகுதி மக்களின் எண்ணமாக உள்ளது. அவர்கள் எதிர்பார்க்கும் நபர்

எம்.எல்.ஏ.வாக வருவாரா? அல்லது காங்கிரஸ் வேட்பாளர் சிவண்ணா 'ஹாட்ரிக்' வெற்றியை ருசிப்பாரா? என்பது அடுத்த மாதம்(மே) 13-ந் தேதி தெரிந்து விடும்.

இத்தொகுதியில் மொத்தம் 3 லட்சத்து 94 ஆயிரத்து 583 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 795 பேர் ஆண் வாக்காளர்கள் ஆவர். பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 87 ஆயிரத்து 706 பேரும், 3-ம் பாலின வாக்காளர்கள் 82 பேரும் இத்தொகுதியில் உள்ளனர். இவர்களுக்காக 371 வாக்குச்சாவடிகளை அமைத்திட தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதுவரை நடந்த தேர்தல் முடிவுகள்

1957-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை ஆனேக்கல் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் பின்வருமாறு:

ஆண்டு வெற்றி தோல்வி

1957 ராமசுவாமி ரெட்டி(காங்.)-11,686 சரபண்ணா(சுயே)-9,706

1962 பிரசாத்(காங்.)-18,755 வெங்கடரமணரெட்டி(சுயே)-17,559

1967 முனிசாமி(காங்.)-20,494 முனிவெங்கடப்பா(சுயே)-11,905

1972 ராமசாமி(காங்.)-25,061 முனிசுவாமி(என்.சி.ஓ)-15,650

1978 ராமகிருஷ்ணன்(ஜனதா கட்சி)-31,771 அன்னப்பா(இந்திரா காங்.)-23,137

1983 ராமகிருஷ்ணா(காங்.)-31,644 அல்லலப்பா(பா.ஜனதா)-22,341

1985 கேசவமூர்த்தி(காங்.) 32,175 தோப்பய்யா(ஜனதா கட்சி)-30,687

1989 கேசவமூர்த்தி(காங்.)-45,718 வேணுகோபால்(ஜனதா தளம்)- 42,548

1994 ராமகிருஷ்ணா(பா.ஜனதா)-42,768 கணபதிராஜா(ஜனதா தளம்)-26,794

1998 நாராயணசாமி(பா.ஜனதா)-62,901 கேசவமூர்த்தி(காங்.)-33,857

1999 நாராயணசாமி(பா.ஜனதா)-62,691 கேசவமூர்த்தி(காங்.)-37,437

2004 நாராயணசாமி(பா.ஜனதா) 63,023 சிவண்ணா(காங்.)-31,965

2008 நாராயணசாமி(பா.ஜனதா)-62,455 கோபால்(காங்.)-52,593

2013 சிவண்ணா(காங்.)-1,05,464 நாராயணசாமி(பா.ஜனதா)-65,282.

2018 சிவண்ணா(காங்.)-1,13,894 நாராயணசாமி(பா.ஜனதா)-1,05,267


Next Story