கலைக்குழுவினரின் நடனத்துடன் சிவமொக்கா தசரா விழா கோலாகலம்; மேயர் சுனிதா அண்ணப்பா தொடங்கி வைத்தார்
கலைக்குழுவினரின் நடனத்துடன் சிவமொக்கா தசரா விழா கோலாகலமாக நடந்தது. மேயர் சுனிதா அண்ணப்பா, ஜம்புசவாரி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
சிவமொக்கா;
சிவமொக்கா தசரா
கர்நாடகத்தில் மைசூரு, ஸ்ரீரங்கப்பட்டணாவுக்கு அடுத்தப்படியாக சிவமொக்காவில் தசரா விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிவமொக்காவில் கடந்த மாதம் (செப்டம்பர்) 26-ந்தேதி தசரா விழா தொடங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சிவமொக்காவில் பல்வேறு போட்டிகளும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் சிவமொக்காவில் நேற்று ஜம்புசவாரி ஊர்வலம் நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக சக்ரேபைலு யானைகள் பயிற்சி முகாமில் இருந்து சாகர், பானுமதி, நேத்ராவதி ஆகிய 3 யானைகள் வரவழைகப்பட்டன. அந்த யானைகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவமொக்காவுக்கு வந்தது. அவைகளுக்கு தினமும் நடைபயிற்சி அளிக்கப்பட்டது.
ஜம்புசவாரி ஊர்வலம்
இந்த நிலையில் நேற்று மதியம் 2.50 மணிக்கு சிவமொக்கா கோட்டை ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் இருந்து ஜம்புசவாரி ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலத்தை மாநகராட்சி மேயர் சுனிதா அண்ணப்பா தொடங்கி வைத்தார். சாகர் யானை, சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் வெள்ளி அம்பாரியை சுமந்து சென்றது. அந்த யானையின் புடைசூழ பானுமதி, நேத்ராவதி யானைகள் சென்றன.
இந்த ஊர்வலத்துக்கு முன்பாக மேள தாளங்கள் முழங்க ஒயிலாட்டம், மயிலாட்டம், கரடி ஆட்டம் உள்ளிட்ட கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த ஊர்வலம் எஸ்.பி.எம். ரோடு, காந்தி பஜார், சிவப்ப நாயக்க சர்க்கிள், அமீர் அகமது சர்க்கிள், நேரு சாலை, கோபி சர்க்கிள், சிறைச்சாலை ரோடு வழியாக சுதந்திர பூங்காவை வந்தடைந்தது. வழிநெடுகிலும் ஏராளமான மக்கள் திரண்டு ஜம்பு சவாரி ஊர்வலத்தை கண்டு ரசித்தனர்.
மக்கள் மகிழ்ச்சி
முன்னதாக சிவமொக்காவில் பன்னிமரம் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. அதில் தாசில்தார் நாகராஜ் கலந்துகொண்டு பன்னி மரத்தை வெட்டினார். இந்த நிகழச்சியில் கலெக்டர் செல்வமணி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதையடுத்து வாணவேடிக்கை நடத்தப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எளிமையாக நடந்த தசரா விழா, இந்த ஆண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.