உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வந்த ரூ.15 லட்சம் பறிமுதல்
உப்பள்ளியில், உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூ.15 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக தொழில் அதிபர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
உப்பள்ளி-
உப்பள்ளியில், உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூ.15 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக தொழில் அதிபர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
போலீசார் வாகன சோதனை
கர்நாடகத்தில் விரைவில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உப்பள்ளி-தார்வார் மாநகர போலீசார், வருவாய் துறை அதிகாரிகள் ஆகியோர் உப்பள்ளி-கார்வார் சாலையில் உள்ள சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
2 பேர் பிடிபட்டனர்
அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த கார் உத்தரகன்னடா மாவட்டம் குமட்டாவில் இருந்து உப்பள்ளிக்கு வந்தது. அந்த காரை நிறுத்தச்சொல்லி போலீசார் கையசைத்தனர். ஆனால் டிரைவர் காரை திருப்பிக் கொண்டு வேகமாக ஓட்டிச்சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தங்களது ரோந்து வாகனங்களில் அந்த காரை விரட்டிச்சென்று மடக்கினர்.
பின்னர் காரில் இருந்த 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் குமட்டா பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபரான சாம்ஜி படேல், அவரது நண்பர் சுனில் படேல் என்பதும், இருவரும் சேர்ந்து உரிய ஆவணங்கள் இன்றி காரில் ரூ.15 லட்சம் கொண்டு வந்ததும் தெரியவந்தது.
வழக்குப்பதிவு
இதையடுத்து போலீசார் ரூ.15 லட்சத்தையும், காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட கார், பணம் ஆகியவற்றை பழைய உப்பள்ளி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில் பழைய உப்பள்ளி போலீசார் சாம்ஜி படேல், சுனில் படேல் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில்
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.