உருட்டுக்கட்டையால் பெண் அடித்து கொலை
மது அருந்த பணம் கொடுக்க மறுத்ததால் உருட்டுக்கட்டையால் பெண்ணை அடித்து கொன்ற அவரது கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சிக்கமகளூரு:-
காபி தோட்ட தொழிலாளர்கள்
சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா பசரிகட்டே அருகே உனகுந்தி கிராமத்தை சேர்ந்தவர் சதானந்தா (வயது 50). இவரது மனைவி யசோதா (45). இவர்கள் 2 பேரும் அந்தப்பகுதியில் உள்ள காபி தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். சதானந்தா மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததாக தெரிகிறது. இதனால் அவர் தினமும் மது அருந்திவிட்டு மனைவி யசோதாவுடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் ேநற்று முன்தினம் மது அருந்த பணம் கொடுக்கும்படி யசோதாவிடம் சதானந்தா கேட்டுள்ளார்.
அடித்து கொலை
அப்போது யசோதா பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சதானந்தா, வீட்டில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து யசோதாவை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஜெயப்புரா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், கொலையான யசோதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கணவர் கைது
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மது அருந்த பணம் கொடுக்க மறுத்ததால், யசோதாவை சதானந்தா உருட்டுக் கட்டையால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ஜெயப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து சதானந்தாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.