வளர்ப்பு நாயால் தோல் நோய் பாதிப்பு: மகளை கொன்று பெண் தூக்குப்போட்டு தற்கொலை
வளர்ப்பு நாயால் தோல் நோய் பாதிப்பு ஏற்பட்டதால் மகளை கொன்று விட்டு தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
பெங்களூரு: வளர்ப்பு நாயால் தோல் நோய் பாதிப்பு ஏற்பட்டதால் மகளை கொன்று விட்டு தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
தோல் நோயால் அவதி
பெங்களூரு பானசவாடி எச்.பி.ஆர். லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் சீனிவாஸ். இவரது மனைவி திவ்யா (வயது 36). இந்த தம்பதிக்கு 13 வயதில்பகிருத்யா என்ற மகள் இருந்தாள். இந்த தம்பதிக்கு கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் முடிந்தது. சீனிவாஸ், ஒரே வீட்டில் தாய்-தந்தை மற்றும் மனைவி, மகளுடன் வசித்து வந்தார். இதில் திவ்யாவிற்கு ஆஸ்துமா இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் தோல் நோயும் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது டாக்டர், தோல் நோய் ஏற்படாமல் இருக்க வீட்டில் நாய் வளர்ப்பதை தவிர்க்குமாறு திவ்யாவிடம் கூறி உள்ளார். அதாவது வளர்ப்பு நாயால் தான் திவ்யாவுக்கு தோல் நோய் வந்ததாக தெரிகிறது.
மகளை கொன்று...
இதையடுத்து திவ்யா, தனது கணவரிடம் வீட்டில் வளர்க்கும் நாயை வேறு எங்காவது விட்டுவிடுமாறு கூறி உள்ளார். ஆனால் அதற்கு அவரது கணவர், குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். இதனால் திவ்யா மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் அவர் தனது மகள் கிருத்யாவை தூக்கில் தொங்கவிட்டு கொன்று தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பானசவாடி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பானசவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.