ஏரியில் குதித்து பெண் தற்கொலை; காப்பாற்ற சென்ற கணவரும் நீரில் மூழ்கி சாவு
ஏரியில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற சென்ற கணவரும் நீரில் மூழ்கி இறந்தார்.
மங்களூரு-
மதுகுடிக்க பணம் இல்லாததால் டி.வி.யை கணவர் விற்க முயன்றதால் ஏரியில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற சென்ற கணவரும் நீரில் மூழ்கி இறந்தார்.
தொழிலாளி
உத்தரகன்னடா மாவட்டம் எல்லாப்பூரை சேர்ந்தவர் இமானுல் சித்தி (வயது 40). இவரது மனைவி யசோதா (32). இவர்களுக்கு சலுவ் (11), ஐரின் (10) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் 2 பேரும் கார்கலாவில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள். இமானுல் சித்தி, மனைவி யசோதா ஆகியோர் நல்லூர் ஹூரவடியில் உள்ள தோட்டத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக யசோதாவிடம் இமானுல் சித்தி தகராறு செய்து வந்துள்ளார். மேலும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இமானுல், மது குடித்து வீட்டுக்கு வந்தார். அவர் மீண்டும் மது குடிக்க பணம் வேண்டும் என கேட்டுள்ளார்.
அதற்கு என்னிடம் தற்போது பணம் இல்லை என யசோதா கூறினார். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், யசோதாவை இமானுல் தாக்கி உள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து அவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து வைத்தனர்.
2 பேர் பிணமாக மீட்பு
இந்தநிலையில், நேற்று முன்தினம் இமானுல் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவர் மதுகுடிக்க பணம் இல்லை என யசோதாவிடம் கூறியுள்ளார். இதனால் வீட்டில் உள்ள டி.வி.யை விற்க போகிறேன் என யசோதாவிடம், இமானுல் கூறினார். இதனால் அவர்கள் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, கணவரின் கொடுமை தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியே சென்ற யசோதா அருகில் உள்ள ஏரியில் குதித்தார். அவரை காப்பாற்ற சென்ற இமானுல் ஏரியில் குதித்தார். இதில் 2 பேருக்கும் நீச்சல் தெரியாததால் அவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டு இருந்தனர்.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தீயணைப்பு நிலையத்்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்போில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
விசாரணை
அவர்கள் ஏரியில் குதித்து தண்ணீரில் மூழ்கிய 2 பேரையும் தேடினர். பின்னர் 1 மணி நேரம் போராடி இமானுல், யசோதா ஆகிய 2 பேரையும் பிணமாக மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கார்கலா புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேர்களின் உடல்களையும் மீட்டு பிேரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கார்கலா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.