வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை கொலை என பெற்றோர் குற்றச்சாட்டு
பெங்களூருவில் வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூரு ராஜனகுண்டே அருகே சிங்கநாயக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சேத்தன். இவரது மனைவி ஆர்த்தி (வயது 34). வெவ்வேறு சாதியை சேர்ந்த 2 பேரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 11 வயதில் மகன் உள்ளான். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஆர்த்தியிடம் உனது வீட்டிற்கு சென்று வரதட்சணை வாங்கி வர வேண்டும் என்று சேத்தன் கூறியதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக சேத்தன், ஆர்த்தி இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது.
இதனால் மனம் உடைந்து காணப்பட்ட ஆர்த்தி நேற்று திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் வரதட்சணை வாங்கி வர மறுத்ததால் ஆர்த்தியை கொலை செய்து உடலை தூக்கில் தொங்கவிட்டதாக சேத்தன் மீது ஆர்த்தியின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ராஜனகுண்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.